Banner After Header

வானம் கொட்டட்டும்- விமர்சனம்

0

RATING : 3.5/5

ஆத்திரத்தில் செய்யும் ஒரு கொலை ஒரு குடும்பத்திற்குள் எத்தகைய அக/புற சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லும் படம் தான் வானம் கொட்டட்டும்.

பழிக்குப் பழி என்பது என்றுமே தீர்வாகது என்ற கருத்தை அழுத்தமாக பதித்த இயக்குநர் தனசேகரன் பாராட்டுக்குரியவர்.

மழை வரும் தருணம் ஒன்றில் கொலைக் குற்றவாளியாக சிறை செல்லும் சரத்குமார் தன் மனைவி ராதிகா, மகன் விக்ரம்பிரபு, மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைப் பிரிந்து சிறையில் வாடுகிறார். சரத்குமார் இல்லாமல் குடும்பம் சென்னை வந்து எப்படித் தழைத்து அடுத்தக் கட்டத்தை எட்டுகிறது என்பதையும், சரத்குமாரை பழி தீர்க்க நினைக்கும் நந்தாவின் ப்ளான் என்னானது என்பதையும் படு எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

கதாப் பாத்திரத் தேர்வுகள் ஒவ்வொன்றும் கன கச்சிதம். அனைவருமே அந்தந்த கேரக்டருக்கான நியாயத்தை சேர்த்திருக்கிறார்கள்.

ராதிகாவின் நடிப்பு அனைவரையுமே மிஞ்சி நிற்கிறது என்பதை படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் சொல்வதை கேட்கலாம். சரத்குமாருக்கு இப்படம் ஒரு தரமான தேர்வு. அழகாக எழுதியிருக்கிறார். விக்ரம் பிரபுவிற்கும் இந்த வானம் கொட்டட்டும் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளைக் கொட்டும் என்று நம்பலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் போல அசத்தி இருக்கிறார். பாலாஜி சக்திவேல் எதார்த்த நடிப்பும் சாந்தனுவின் சாந்தமான நடிப்பும் வசீகரிக்கின்றன. நந்தாவின் வில்லத்தனம் மட்டும் போதிய அழுத்தம் இல்லாமல் சற்று போதாமையைக் காட்டுகிறது..

படத்தின் கேமரா கோணங்களில் தேனி மாவட்டத்தின் வாழைத் தோட்டமும், சென்னையில் அடர்த்தி நிறைந்த ஏரியாவும் அநாயசமாக பதிவாகி இருக்கிறது. பின்னணி இசையில் வரும் அதிர்வு படம் நெடுக படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. பாடல்களும் பாடல்களுக்கான சூழல்களும் அருமை.

முன்பாதியில் இருந்த திரைமொழி நேர்த்தி பின்பாதியில் சற்று குறைவாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் மன நிறைவாக இருப்பதால் வானம் கொட்டட்டும் நிறை மழை எனலாம்.

Leave A Reply

Your email address will not be published.