Banner After Header

வட சென்னை – விமர்சனம் #VadaChennai

0

RATING 3.5/5

நடித்தவர்கள் – தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர்

இசை – சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு – வேல்ராஜ்

இயக்கம் – வெற்றிமாறன்

வகை – கிரைம் த்ரில்லர் – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘A’

கால அளவு – 2 மணி நேரம் 46 நிமிடங்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெட்டு, குத்து, ரத்தம், கொலை என்கிற தனித்த அடையாளத்தோடு வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘வட சென்னை’.

காலங்காலமாக தமிழ்சினிமாவில் வட சென்னையைப் பற்றி எப்படி காட்சிப்படுத்தி வருகிறார்களோ? அப்படித்தான் இந்தப் படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் அதை போகிற போக்கில் கொஞ்சமாக தொட்டுச்செல்லாமல் கூடுதல் கவனத்தோடு திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இதுதான் வடசென்னையின் கலரா? என்று பார்ப்பவர்களை குலை நடுங்க வைக்கிறது இந்தப்படம். அதே சமயம் இதைத்தாண்டி கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், வேலை உள்ளிட்ட விஷயங்களில் வட சென்னை மக்களின் பங்கு என்ன? அப்படி ஒரு மேம்படுத்தல்களே வட சென்னையில் நிகழவில்லையா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

ஏரியா தாதாவான அமீரின் ‘தலைவன்’ இடத்தைப் பிடிக்க அவருக்கு கீழே அடியாட்களாக வேலை செய்யும் சமுத்திக்கனியும், கிஷோரும் போட்டி போடுகிறார்கள். அந்த வெட்டு, குத்து, மோதல்களில் தனுஷும் சிக்கிக் கொள்ள அதிலிருந்து எப்படி மீள்கிறார்? அமீர் இடத்தைப் பிடிக்க நடந்த போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்பதே மீதிக்கதை.

ஒரு மாஸ் ஹுரோ படமென்றால் ஓப்பனிங் சாங், அவருக்கென்று பஞ்ச் டயலாக்குகள் எல்லாமே இருக்கும். ஆனால் இதில் அப்படி பில்டப் காட்சிகள் எதுவுமே தனுஷுக்கு இல்லை. மிகவும் சாதாரணமாக படத்தில் வருகிற மற்ற கேரக்டர்கள் எப்படி எண்ட்ரி கொடுப்பார்களோ? அப்படித்தான் எண்ட்ரி கொடுக்கிறார்.

பில்டப்புகள் அதிகம் இல்லை என்றாலும் சண்டைக் காட்சிகளில் மாஸ் லெவலை குறையாமல் காட்டுகிறார்.

அவருடைய காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வட சென்னை லோக்கல் பாஷையை அச்சுபிசகாமல் பேசி அசத்துவதும், அதற்கேற்ற உடல்மொழிகளும் கைத்தட்டல்களை அள்ளுகிறது. படத்துக்கு சென்சார் ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கலாம். அதற்காக சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகளை பேசுவதெல்லாம் டூ-மச்!

அமீரின் மனைவியாக வரும் ஆண்ட்ரியா இடைவேளை வரை அவ்வப்போது சில காட்சிகளில் பல முகபாவனைகளைக் காட்டுகிறார். அதைத்தாண்டி அதிகம் முதல் பாதியில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுக்கிறார்.

அவரைப்போலவே அமீரும் இடைவேளை வரையிலான காட்சிகளில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே தலைகாட்டுகிறார். அவ்வளவு தானா? அமீர் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீனவ மக்களின் நல்லது, கெட்டதுகளுக்காகப் போராடுகிற தலைவனாக வருகிறார். இடைவேளைக்குப் பிறகு இறங்கி அடிக்கிறார்.

சமுத்திரக்கனி, ஜானி, டேனியல் பாலாஜி, கிஷோர், பாவல் நவகீதன், ராதாரவி என படத்தில் வருகிற அத்தனை கதாபாத்திரங்களும் வட சென்னையின் யதார்த்த முகங்களை முழுமையாக பிரதிபலிக்கிறார்கள்.

இரவுநேரக் காட்சிகளில் திக் திக்கென்று ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது வேல்ராஜின் ‘பளிச்’ ஒளிப்பதிவு. அதற்கு பக்காவான பின்னணி இசையைக் கொடுத்து பலம் சேர்த்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

வெட்டு, குத்து, ரத்தம் என வட சென்னை மக்களின் வாழ்க்கை இப்படித்தானா? இதைத்தாண்டி அவர்களுக்கென்று அன்பு, நட்பு, பாசம், காதல் போன்றவை அடங்கிய நாகரீக வாழ்க்கை இல்லையா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று பார்க்கிற ஆவலைத் தூண்டும் விதமாக “வட சென்னை 2 – அன்புவின் எழுச்சி” என்கிற டைட்டில் கார்டோடு படத்தை நிறைவு செய்கிறார்கள்.

அடுத்தடுத்து வரப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘வட சென்னை’யின் இரண்டு, மூன்றாம் பாகங்கள் வன்முறை குறைவாக அல்லது அறவே இல்லாத படங்களாக வருமா? என்பதே முதல் பாகத்தை கொண்டாடும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.