வனமகன் – விமர்சனம்

0

Vanamagan-Review

RATING : 3/5

கோடீஸ்வர வீட்டுப் பெண்ணான நாயகி சாயீஷா சைகல் தனது நண்பர்களுடன் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு அவர்கள் சென்ற காரால் ஏற்படும் எதிர்பாராத விபத்து ஒன்றில் காட்டுக்குள் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நாயகன் ஜெயம் ரவிக்கு அடிபட்டு விடுகிறது.

அறிமுகமில்லாதவராக இருந்தாலும் அவரும் ஒரு உயிர் தானே என்று இரக்கப்படும் சாயீஸா ஜெயம்ரவியைக் காப்பாற்றுவதற்காக அவரை தன் காரிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார். காட்டிலிருந்து நகரத்துக்கு வந்த ஜெயம்ரவிக்கு அந்த வாழ்க்கை முறையே முற்றிலும் புதியதாகத் தெரிகிறது. அதனால் கண்ணில் பட்டைதையெல்லாம் நொறுக்குகிறார். அருகில் வருபவர்களையெல்லாம் அடித்து விளாசுகிறார். டிவியில் புலி உருவம் தெரிந்தால் கூட நிஜப்புலி தான் என்று நினைத்து கையில் வைத்திருக்கும் வில் அம்பால் டிவியை சேதப்படுத்துகிறார். வீட்டில் தூங்குவதற்குப் பதிலாக பெரிய மரத்தில் தான் குரங்கு போல உட்கார்ந்து கொண்டே படுத்துத் தூங்குகிறார்.

அவரின் இந்த செயல்களை எல்லாம் பொறுமையாக ரசிக்கும் சாயீஷா விலங்குகளின் குணங்களைக் கொண்டவர்களை எப்படி கையாள்வது என்கிற விபரத்தை இணையதளத்தில் படித்து அதன்படி ஜெயம்ரவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அதோடு ஜெயம் ரவி செய்யும் சேஷ்டைகளால் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி சுயநலம் கொண்டவர்களாகவும், பணத்தாசை பிடித்தவர்களாகவும், மனிதாபிமானம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்? என்பதையும் உணர்கிறார்.

அந்த உணர்வே ஜெயம்ரவி மீது சாயீஸாவுக்கு ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் தெரிந்தவுடன் தனது மகன் வருணுக்கு சாயீஸாவை திருமணம் செய்து வைக்க திட்டமிடும் பிரகாஷ்ராஜ் ஜெயம்ரவியிடமிருந்து சாயீஸாவை பிரிக்க திட்டமிடுகிறார். அதே சமயம் ஜெயம் ரவி உள்ளிட்ட பழங்குடியினர் வாழும் காட்டுப்பகுதியை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அபகரிக்க திட்டமிடுகிறது? இந்த இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் எப்படி இருவரும் விடுபடுகிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

நாட்டுக்குள் மனிதர்களாக இருப்பவர்கள் எப்படி பழகுவதிலும், நடந்து கொள்வதிலும் மிருகத்தை விட கேவலமான மனநிலையோடு வாழ்கிறார்கள் என்கிற சமூகக் கருத்தை மிக எளிமையான ஃகலர்புல்லாக காட்சிகளுடன் படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

காட்டுவாசியாக வரும் ஜெயம்ரவி நூறு சதவீதம் மிகச்சரியாக செட்டாகியிருக்கிறார். ஜிம்முக்கெல்லாம் சென்று உடம்பை ஏற்றி கட்டுமஸ்த்தான உடம்புடன் அவர் ஏற்று நடித்திருக்கும் அந்த கேரக்டரில் மரத்துக்கு மரம் தாவுவது, சுவரை இடித்துக் கொண்டு உள்ளே வருவது, தன்னை தாக்க வருபவர்களை தூக்கியெறிந்து பந்தாடுவது என ஹாலிவுட் பட ஹீரோக்கள் ரேஞ்சில் மிரட்டியிருக்கிறார். படம் முழுக்க வாய் பேசாமல் ஒரு அதுவும் ஜெயம் ரவி போன்ற பிரபல ஹீரோவை நினைத்துப் பார்க்க முடியுமா? என்கிற சந்தேகம் படம் பார்க்கப் போகும் முன்பே நமக்குத் தோன்றும் ஆனால் அந்த குறையே தெரியாத வண்ணம் முழுப்படத்தையும் எந்தவித நெருடலும் இல்லாமல் ரசிக்க வைக்கிற அவர் காட்டும் சின்னச் சின்ன உடல் மொழிகள் அத்தனையும் அபாரம்!

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சாயீஸா சைகல் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவைதயைப் போல ஃப்ரெஸ்ஸாக ஜொலிக்கிறார். நடனத்தில் பெண்டை வளைத்து செம ஆட்டம் ஆடுகிற அதே சமயத்தில் நடிப்பிலும் கூட குறையில்லாமல் நிறைவாகச் செய்திருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸில் உருண்டு புரளும் காட்சியெல்லாம் சான்ஸே இல்லை.

”சிட்டிக்குள்ள கூகுள் மேப் மாதிரி காட்டுக்குள்ள ஈகிள் மேப்” போன்ற சின்னச் சின்ன வசனங்களை பேசுவதில் காமெடியாக ரசிக்க வைக்கிறார் தம்பி ராமையா.

இவர் எந்த மாதிரியான ஆள் என்று யோசிக்க வைக்கிற பிரகாஷ்ராஜ் கிளைமாக்ஸில் வில்லனாக மாறி அப்புறம் நல்லவனாகி விடுகிறார்.

வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் முத்திரை பதிக்கிறார்கள்.

பச்சைப் பசேலென்ற காடுகளையும், அங்கு நிரம்பியிருக்கும் அழகையும் பார்க்கும் போது இங்கேயே வாழப்போய் விடலாமா? என்று நினைக்க வைத்து விடுகிறது திருவின் பரிசுத்தமான ஒளிப்பதிவு.

‘டேம் டேம்…’, ‘யம்மா ஏ அழகம்மா…;, சிலு சிலு…’ என பாடல்களை முணுமுணுக்க வைத்த ஹாரீஸ் ஜெயராஜ் ஆக்‌ஷன் படங்களுக்குரிய பின்னணி இசையைப் போட்டு விட்டு காட்டுப் பகுதிகளில் உலா வந்த உணர்வைத் தருவதில் ஏமாற்றியிருக்கிறார்.

காடுகளை அழிக்க நினைக்கிற கார்ப்பரேட் நிறுவனங்கள், அதற்கு எதிராக போராடும் மக்கள் என தமிழ்சினிமாவில் காடுகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்களின் வரிசையில் சேர்த்தி தான் இந்த வனமகனும்!

ஆனாலும் அந்த கார்ப்பரேட் காவாளித்தனங்களோடு நின்று விடாமல் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இயற்கையை நேசிக்க வேண்டும் என்கிற  சமூக கருத்தோடு  காட்டுவாசி மனிதர்கள் நகரத்துக்குள் வந்தால் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை காமெடியாகக் காட்சிப்படுத்தி குழந்தைகளுடன் குடும்பத்தோடு சென்று பார்த்து குதூகலிக்கக் கூடிய வகையில் படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

வன மகன் – நன் மகன்!

Leave A Reply

Your email address will not be published.