Banner After Header

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம்

0

velai2

RATING : 3.5/5

குமுற குமுற அடிக்கிற படங்களுக்கு மத்தியில் குலுங்க குலுங்க சிரிக்க வெக்கிற படமா வந்திருக்கு இந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.

அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களை நம்பி கதையில் சமரசம் செய்து கொண்டு படத்தை கொலை செய்வதை விட, வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் கை கோர்த்துக் கொண்டு எந்த சமரசமும் செய்யாமல் ஈஸியாக ஹிட்டடிக்கலாம் என்று சக இயக்குநர்கள் வட்டத்தையே யோசிக்க வைத்திருக்கிறார் சீனியர் இயக்குநர் எஸ்.எழில்.

நல்ல யோசனை சார்…

சரி கதைக்கு வருவோம்.

எம்.எல்.ஏவான ரோபோ ஷங்கர் நடத்தி வைக்கும் இலவச திருமணத்துக்கு ஆட்களை திரட்டுகிறார் அவரது நண்பரான ஹீரோ விஷ்ணு விஷால்.

எண்ணிக்கையில் ஒரே ஒரு ஆள் மட்டும் குறைய, அந்த ஏரியாவிலேயே பிரபலமான புஷ்பா
( ரேஷ்மா ) என்ற பெண்ணை சும்மா போலியாக திருமணம் செய்து கொள்ளும்படி நண்பன் சூரியை நிர்பந்திக்கிறார்.

சூரியும் நண்பனுக்காக அந்த புஷ்பாவை திருமணம் செய்து கொள்ள, இந்த விபரம் மறுநாள் பேப்பர்களில் தெரிய வரவும் ”நீ புஷ்பாகிட்ட விவாகரத்து வாங்கிட்டு வா அப்பத்தான் உன்னை நான் கட்டிக் கொள்வேன்” என்று மாமன் மகள் கோபித்துக் கொண்டு போய் விடுகிறாள்.

தவிக்கும் சூரி புஷ்பாவிடம் விவாகரத்து கேட்க, புஷ்பாவோ ”எம்.எல்.ஏ வந்து சொன்னால் உனக்கு நான் விடுதலை பத்திரத்திரத்தில் கையெழுத்து போட்டுத் தருகிறேன்” என்று சொல்ல சூரி எம்.எல்.ஏவைத் தேடி வருகிறார்.

இன்னொரு பக்கம் அதே ஊரில் போலீஸ் வேலைக்கு சேர்வதற்காக காத்திருக்கும் நாயகி நிக்கி கல்ராணியை அவரது அப்பா ஞானவேல் எம்.எல்.வுக்கு நெருக்கமான ஹீரோ விஷ்ணு விஷாலிடம் 10 லட்சம் ரூபாயைக் கொடுத்து எப்படியாவது தன் மகளுக்கு சிபாரிசில் போலீஸ் வேலை வாங்கித்தருமாறு கேட்கிறார்.

10 லட்சத்தை எம்.எல்.ஏவிடம் கொடுத்து விட்டு விஷ்ணு விஷால் காத்துக் கொண்டிருக்க, கோமாவில் இருக்கும் அமைச்சர் தான் சேர்த்து வைத்த 500 கோடி ரூபாய் சொத்து ரகசியத்தை தனது மைத்துனர் ரவிமரியாவிடம் சொல்லாமல் தன்னை பார்க்க வரும் நம்பிக்கைக்குரிய ரோபோ சங்கரிடம் சொல்கிறார்.

அதை கேட்டு விட்டு வருகிற வழியில் விபத்தொன்றில் சிக்கி 10 வயது குழந்தை பருவத்துக்கு சென்று விடுகிறார் ரோபோ சங்கர்.

அப்புறம் என்ன?

கோமாவில் இருக்கும் எம்.எல்.ஏ ரோபோ சங்கர் ஞாபகம் திரும்பியதா? சூரி மாமன் மகளை திருமணம் செய்தாரா? விஷ்ணு விஷால் கொடுத்த 10 லட்சம் என்னவானது? 500 கோடியை ரவிமரியா எடுத்தாரா? இந்தக் கேள்விகளுக்கு கலங்க கலங்க காமெடி செய்கிறார்கள்.

படத்தில் ஹீரோ விஷ்ணு விஷால் என்றாலும், பெரும்பாலான சீன்களில் ஸ்கோர் செய்வதுசூரியும், ரோபோ சங்கரும் தான்.

தங்க மோதிரத்துக்கு ஆசைப்பட்டு அந்த ஏரியா ஐட்டமான புஷ்பாவை திருமணம் செய்து கொண்டு அவரிடமிருந்து விடுதலை பெறுவதற்குள் சூரி படு பாடும், அதற்கேற்ற எக்ஸ்பிரசன்களும் இருக்கிறதே? அப்பப்பா தியேட்டரை விட்டு வந்த பிறகும் கூட நினைத்து நினைத்து சிரிக்க வைத்து விடுகிறார் மனுஷன்.

அதிலும் புஷ்பா நம்பர் யார்கிட்ட இருக்கு என்று டெய்லர் கடையில் நண்பர்களிடம் கேட்க, அவர்கள் இல்லை என்று சொல்லவும் அதே கடையில் காஜா தைக்கிற பையன் மனப்பாடமாக சொல்லும் போது ”அடப்பாவிகளா… காலேஜ் பையன் சொன்னா பரவாயில்ல… காஜா தைக்கிற பையனெல்லாம் புஷ்பா நம்பரை சொல்றானே..?” என்று கதறுகிற காட்சியில் தியேட்டர் முழுக்க சிரிப்பு சத்தம் தான்.

சூரியைப் போலவே இடைவேளைக்குப் பிறகு தன் பங்குக்கு சிரிப்புக்கு கியாரண்டி தருகிறார் ரோபோ சங்கர்.

500 கோடி ரகசியத்தை கேட்பதற்காக ரோபோ சங்கர் கடத்தி வரும் ரவிமரியா அந்த ரகசியத்தைகேட்பதற்காக தயாராவார். அந்த ரகசியத்தை ”காலைல ஆறு மணி இருக்கும்” என்று சொல்ல ஆரம்பிப்பார் பாருங்கள். அடுத்த அரை மணி நேரம் நான் – ஸ்டாப்பாக சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடுகிறது அந்தளவுக்கு ரவிமரியாவும், ரோபோ சங்கரும், சூரியும் அந்த இடத்தில் கைதட்டல்களை அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால் தனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்து விட்டு காமெடி நடிகர்களுக்கு அதிக இடம் விட்டிருப்பது ஒரு ஹீரோவாக இல்லாமல் ஒரு தயாரிப்பாளராக யோசித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.

போலீஸ் வேலை லட்சியத்தில் இருக்கும் நிக்கி கல்ராணி அந்த உடையில் அவ்வளவாக பொருந்தவில்லை என்றாலும் பாடல் காட்சிகளிலும், மோதல் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்.

எப்போதுமே தியேட்டர் ஸ்க்ரீன் கிழிய கத்திக்கொண்டு நம் காதுகளை டேமேஜ் ஆக்கும் ரவிமரியா இதிலும் வில்லனாகவே வருகிறார். இருந்தாலும் அளவாக கத்தி அதை சிரிப்புத் தோரணங்களாக்கி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். இந்த லெவலை அடுத்தடுத்த படங்கள்ல அப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க ரவி சார்…

பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையில் யாருப்பா இசை என்று யோசிக்காமல் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

சக்தியின் ஒளிப்பதிவில் விஷ்ணு விஷால் போடுகிற காஸ்ட்யூம்கள் கூட கலர்ஃபுல் தான்.

அடங்காத கத்தரி வெயில்ல மண்ட காஞ்சி போனவங்க எல்லாம் இந்தப்படம் ஓடுற தியேட்டருக்குள்ள போங்கப்பா… மண்டை சூடு இறங்கி ஜிவ்வுன்னு ஆயுடும்.

மூளையைக் கசக்கி கதை எழுதுற கனவான்களே? இந்தப்படத்தை பார்த்தாவது ரசிகர்களோட ஓவர் ஆல் டேஸ்ட் என்னன்னு தெரிஞ்சிக்கங்கப்பா.

அடேங்கப்பா கதைன்னே பெருசா யோசிக்காம இப்படி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வெச்சுட்டாரே..? என்று ஆச்சரிப்படுகிற அளவுக்கு புல் அண்ட் புல் காமெடிப்படமாக தந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எழில்.

ஹீரோவுல ஆரம்பிச்சி எல்லா கேரக்டருமே நான் ஸ்டாப் காமெடியால நம்மை துவைச்சு துவம்சம் பண்ணிடுறாய்ங்க… இம்மி கூட சீரியஸ் இல்லாம ஃபேமிலியோட பார்த்து ரசிக்க தோதான படம்!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – காமெடி கிங்!

Leave A Reply

Your email address will not be published.