Banner After Header

விதி மதி உல்டா – விமர்சனம்

0

RATING – 2.5/5

நட்சத்திரங்கள் : ரமீஸ் ராஜா, ஜனனி (ஐயர்), டேனியல் பாலாஜி, செண்ட்ராயன் மற்றும் பலர்

இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி

ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ

இயக்கம் – விஜய் பாலாஜி

வகை – காமெடி, த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’

கால அளவு – 1 மணி 52 நிமிடங்கள்

னவில் நடப்பதெல்லாம் நிஜத்தில் அப்படியே நடக்க ஆரம்பித்தால் என்னவாகும்? சரி நடந்தது நல்ல கனவாக இருந்தால் பரவாயில்லை, அதுவே கெட்டதாக இருந்தால்? அப்படி தான் கண்ட கெட்ட கனவை எப்படி தான் ஹீரோ மதியால் வெல்கிறார் என்பதே இந்த ‘விதி மதி உல்டா.’

பார்த்த முதல் பார்வையிலேயே காதல். அதன் விளைவு ஹீரோயின் ஜனனியை துரத்தி துரத்தி காதலிப்பதை மட்டுமே முழு நேர வேலையாகச் செய்கிறார் படித்து விட்டு வேலையில்லாமல் நண்பனோடு ஊர் சுற்றும் ஹீரோ ரமீஸ் ராஜா.

அவரைப் போலவே வில்லன் டேனியல் பாலாஜியின் தம்பியும் ஜனனியை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால் ஜனனியோ ரமீஷின் காதலுக்கு மட்டும் க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் டேனியல் பாலாஜியின் தம்பி ஜனனியை ஒரு காரில் கடத்துகிறார்.

இன்னொரு பக்கம் வீட்டைப் பிடித்துக் கொடுத்த பிறகும் கமிஷன் பணத்தைத் தராததால் கு.ஞானசம்பந்தத்தின் மகனான ஹீரோ ரமீஸ் ராஜாவை ஒரு காரில் கடத்துகிறார் வீட்டு புரோக்கர் செண்ட்ராயன்.

செண்ட்ராயனால் கடத்தப்படும் ஹீரோ ரமீஷ் ராஜாவும், டேனியல் பாலாஜி தம்பியால் கடத்தப்படும் ஹீரோயின் ஜனனியும் ஒரே கட்டிடத்தில் சிறை வைக்கப்படுகிறார்கள்.

அதே கட்டிடத்தில் தான் கொள்ளையடித்து வைத்தப் பணத்தை எடுக்க வருகிறார் திருடன் கருணாகரன்.

அப்போது அங்கு நடக்கும் மோதலில் டேனியல் பாலாஜியின் தம்பி கொல்லப்படுகிறார். தம்பி கொல்லப்பட்ட ஆத்திரத்தில் காதலி, அம்மா, அப்பா  என ஹீரோவின் குடும்பத்தையே காலி செய்கிறார் டேனியல் பாலாஜி.

நடப்பதையெல்லாம்  பார்த்து பதறியடித்துக் கொண்டு கண் விழிக்கிறார் ஹீரோ ரமீஸ் ராஜா.

ஆமாம், அதுவரை அவர் கண்டதெல்லாம் ஒரு கெட்ட கனவு?

ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் வருவது தான் சுவாரஷ்யத்தின் உச்சம். அவர் கனவில் கண்ட சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொரு காட்சியாக நகர, அப்படியானால் தன் காதல், அம்மா, அப்பா நிஜமாகவே வில்லன் கோஷ்டியால் கொல்லப் படுவார்களோ? என்று நினைத்து பதட்டப்படும் அவர் அதிலிருந்து எப்படி காதலியையும், தனது அம்மா அப்பாவையும் காப்பாற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

ஆள் பார்ப்பதற்கு அமுல் பேபி மாதிரியான பேஸ்கட்டோடு வருகிறார் ஹீரோ ரமீஸ் ராஜா. சொந்தத் தயாரிப்பு என்றாலே ஓவர் பில்டப் காட்சிகளை வைத்து அளப்பறை கொடுக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் கேரக்டருக்கு என்ன தேவையை அதை மட்டுமே நடிப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படி ஒரு கதையை அவர் தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டதே ஆச்சரியம் தான். ரசிகர்களில் ‘பல்ஸ்’ அறிந்தவராக தொடர்ந்து இது போன்ற வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்தால் கோடம்பாக்க கிரவுண்ட்டில் அவரும் ஒரு ரவுண்டு முன்னுக்கு வர வாய்ப்பிருக்கிறது. (வாழ்த்துகள் ப்ரதர்)

மாடர்ன் கேர்ள் ஆகவும், அதே சமயம் அதிலும் கூட சிம்பிளாக வருகிறார் ஹீரோயின் ஜனனி ஐயர். படத்தில் அவருக்கு குளியல் காட்சி, பாடல் காட்சிகளில் குட்டைப் பாவடை எல்லாம் உண்டு. அதை விரசமில்லாமல் படமாக்கியது பாராட்டுக்குரியது.

தம்பி மீது பெரும் பாசம் காட்டும் அண்ணனாக வரும் டேனியல் பாலாஜி தனது அக்மார்க் முறைப்பில் அதே வழக்கமான நடிப்பில் கவர்கிறார்.

கன்னா பின்னாவென்று கத்தாமல் படம் முழுக்க அடக்கியே வாசித்திருக்கும் செண்ட்ராயன் காமெடியில் நிஜமாகவே சிரிக்க வைக்கிறார். அவருடைய சில முகபாவனைகள் கூட எரிச்சல் தராமல் வேலை வாங்கியிருக்கும் இயக்குனருக்கு கோடானு கோடி நன்றிகள். கருணாகரன் உட்பட படத்தில் வில்லன் கோஷ்டியில் வருகிற அத்தனை பேரும்  சிரிக்க வைக்கிறார்கள்.

அஸ்வின் விநாயக மூர்த்தியின் இசையும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் படு நேர்த்தி.

நேரத்தின் அருமை உணர்ந்து தேவையில்லாமல் காட்சிகளை கத்தரி போட்டு காட்சிகளைக் கோர்த்ததில் செம ”ஷார்ப்” காட்டியிருக்கிறார் எடிட்டர் புவன் சீனிவாசன்.

இது சீரியஸ் படமா? அல்லது காமெடிப் படமா? என்று யோசிக்கிற அளவுக்கு சீரியஸ், காமெடி என காட்சிகள் மாறி மாறி வருகிறது. அந்தக் குழப்பம் திரைக்கதையில் இல்லாமல் பார்த்துக் கொண்டு ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடு ரசிக்கவும், சிரிக்கவும் வைத்த விதத்தில் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய் பாலாஜி.

Leave A Reply

Your email address will not be published.