Banner After Header

விஷாலுடன் என்ன பிரச்சனை? – மனம் திறந்த விஜய் சேதுபதி

0

டத்துக்கு படம் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் லேட்டஸ்ட் வரவு தான் ’96’.

த்ரிஷா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

96-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பையும் அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட நட்பு, காதலை இரண்டையும் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் ரிலீசின் போது ஏற்பட்ட சிக்கலில் வருத்தப்பட்ட விஜய் சேதுபதிக்கு படத்தின் வெற்றிச் செய்தி அவருக்கு தெம்பையும், சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது.

அந்த நிம்மதியான மனநிலையில் நிருபர்களை சந்தித்து படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சந்திப்பில் விஜய் சேதுபதி பேசியதாவது, ”தமிழ்சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் ’96’. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்.

நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன்.
அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.

இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார் மீது குறை சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம். அதற்காக இவ்விஷயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்த விரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல.

என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். விஷால் நல்ல மனிதர். அவரை குறை சொல்லவில்லை. தவறு யார் மீதும் இல்லை. விஷால் சூழல் என்னவோ? அவர் எவ்வளவு ரூபாய்க்கு வட்டி கட்டுகிறாரோ? அவருக்கு என்ன நடந்ததோ? யாருக்கு தெரியும். எனக்கு அவர் மீது துளியும் வருத்தம் இல்லை. அது எனக்கு தவறாகவே தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு பணத்தை விட்டுக் கொடுத்தாரோ? அதெல்லாம் அவருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது இந்த பணத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவே அவருடைய பெரிய மனது. அதனால் வருத்தப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.

பட ரிலீஸ் அன்று நான் செஸ் போர்டு காயாக விளையாடப்பட்டேன். இதற்கு யார் மீது பழி சுமத்துவீர்கள்? சீமராஜாவிற்கு முன் சிவகார்த்திகேயனுக்கு என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். நடிகர் விமலுக்கு என்ன நடந்தது என்றும் தெரியும். இது எல்லோருக்கும் நடக்கும் இயல்பான வி‌ஷயம். அதற்காக நான் பைனான்சியர்கள் மீது குறை சொல்லவில்லை.

தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக் கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயர முடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விஷயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.