வரம்பு மீறிய ரசிகர்கள்! : பிரம்பை எடுத்தார் விஜய்

0

vijay

ழக்கமாக சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுடன் தான் மோதிக்கொண்டிருப்பார்கள் விஜய் ரசிகர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் நடக்கும் இந்த சண்டை இன்று வரை முடிந்தபாடில்லை.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆபாச அர்ச்சனைகளை வீசுவார்கள். இப்படி போய்க் கொண்டிருந்த விஜய் ரசிகர்களின் கோபம் கடந்த சில தினங்களாக ஒரு பெண் பத்திரிகையாளரை நோக்கித் திரும்பியது தான் பெரும் சர்ச்சையாகி விட்டது.

ஆங்கில இணையதளம் ஒன்றில் வேலைபார்க்கும் பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், சில தினங்களுக்கு முன்பு, விஜய் நடித்து வெளிவந்த ‘சுறா’ படம் குறித்தான ஒரு கருத்தை அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டரில் பதிவு செய்தார்.

அதைப் படித்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தரக் குறைவான கமெண்ட்டுகளை ஆயிரக்கணக்கில் பதிவு செய்தனர். அதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர நினைத்த தன்யா ‘சுறா’ படம் குறித்து தான் போட்ட அந்த டிவிட்டர் பதிவையும் நீக்கினார். ஆனால் அதன் பிறகும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அவரை தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் பொறுக்க முடியாத தன்யா சென்னை மாநகரக் காவல் துறையில், தன்னை தரக் குறைவாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதோடு தன்யாவுக்கு ஆதராவாக சக பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல், திரையுலகைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்தனர்.

இந்த விவகாரம் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து சமூகவலைத்தளங்களில் வரம்பு மீறும் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.

யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.

எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.

அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு விஜய் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் ரசிகர்கள் என்கிற போர்வையில் குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக கருத்துகளை தெரிவிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல், யாராக இருந்தாலும் பொது வெளியில் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று அவர்களின் தவறான செயல்களுக்கு எதிராக விஜய் பிரம்பை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

இதை மற்ற பிரபலங்களும் கவனத்தில் கொண்டால் நல்லது.

Leave A Reply