Banner After Header

விக்ரம் வேதா விமர்சனம்

0

VIKRAM-VETHA

RATING : 3.5/5

விக்ரமாதித்தன் வேதாளம் கதை எல்லோருக்கும் தெரியுமல்லவா?

வேதாளத்தை தன் தோள் மீது சுமந்து கொண்டு செல்லும் விக்ரமாதித்தனின் கவனத்தை திசை திருப்பி தப்பிக்க அது ஒவ்வொரு கதையாகச் சொல்லும். அப்படித்தான் இந்தப்படத்தை திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி.

16 கொலைகளைச் செய்து விட்டு வட சென்னையின் டான் ஆக இருக்கும் விஜய் சேதுபதியைத் தேடி அலைகிறது என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான மாதவன் தலைமையில் ஒரு போலீஸ் படை.

ஒரு இடத்தில் விஜய் சேதுபதி பதுங்கியிருக்கிற விபரம் தெரிந்து அவரை நெருங்குகிறார்கள். அவரோ தானாகவே அவர்களிடம் சரணடைகிறார்.

தன்னை விசாரிக்க வரும் மாதவனிடம் தன் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்களை ஒவ்வொரு கதையாகச் சொல்கிறார். ஒவ்வொரு கதையின் முடிவிலும் நடந்த சம்பவங்களின் உண்மை மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கிறது.

கிளைமாக்ஸில் யார் செய்தது? தர்மம்? யார் செய்தது அதர்மம்? என்பதாக முடிகிறது படம்.

மாதவன் – விஜய் சேதுபதி இருவருமே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஹீரோக்கள். இருவருக்குமான கேரக்டர்களை சரிசமமாக வடிவமைப்பதில் புஷ்கரும், காயத்ரியும் எடுத்துக் கொண்ட சிரத்தைக்கு கை குலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.

‘விக்ரம்’ என்கிற போலீஸ் ஆபீசர் கேரக்டரில் கம்பீரமாக வரும் மாதவன் அதற்கே உரிய மிடுக்குடன் விசாரணையை மேற்கொள்வதும், உண்மையைத் தேடி அவர் அலைகிற காட்சிகள் போலீஸ் அதிகாரிகளில் இப்படிப்பட்டவர்கள் தான் எப்போதுமே தேவை என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. அறிமுகக் காட்சியில் அவ்வளவு நீளமானக் காட்சியில் அசால்ட்டாக நடிக்கும் அவரது உடல் மொழிகள் நடிப்பில் நான் சீனியர் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

அவரது மனைவியாக வரும் ஷ்ரதா ஸ்ரீநாத் மாதவன் உடனான ரொமான்ஸ் காட்சிகளில் அப்படி ஒரு நெருக்கம். கணவர் விசாரணை செய்யும் கைதிக்கே வக்கீலாக வேலை செய்தாலும் கணவனுக்கு அடிபட்டு விட்டதே என்று சொல்லி துடிக்கிற காட்சி அதி அற்புதம்.

ஒவ்வொரு முறையும் விஜய் சேதுபதி கதை சொல்லி தப்பித்து ஓடுவதும், அவரைப் பிடிக்க வேண்டும் என்பதை விட அவர் சொல்கிற சம்பவங்களில் இருக்கிற உண்மைத் தன்மைகளை ஆராய்வதும் ஒரு சீனியர் ஆபீஸருக்கான கெத்து.

‘வேதா’ என்கிற வட சென்னையின் டான் கேரக்டரில் எண்ட்ரி கொடுக்கிறார் விஜய் சேதுபதி. கையில் வைத்திருக்கும் வடையை தூக்கி எறிந்தபடியே அவர் கொடுக்கும் எண்ட்ரியில் தியேட்டர் விசில் சத்தத்தாலும், கைதட்டல்களாலும் அதிர்கிறது.

டான் என்றால் எப்போதுமே கண்களில் கொலை வெறி தானா என்ன? இது நானா ஆசைப்பட்டு செய்கிற வேலை. ஆனாலும் தன் தம்பி கதிரை அந்தத் தொழிலுக்கு இறக்கி விடாமல் பாதுகாக்க நினைப்பதும், தாயுள்ளத்தோடு அவர் மீது பாசம் காட்டுகிற போதும் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறார் விஜய் சேதுபதி.-

குறைவான காட்சிகளில் வந்தாலும் வந்த காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி. இருந்தாலும் கதிருக்கு காதலியா? என்று யோசிக்கிற போது தான் அவரை விட வயசு அதிகமான பெண் போலத் தெரிகிறார்.

பக்கா ஆக்‌ஷன் படத்துக்குரிய கலர் டோனில் படமாக்கப்பட்டிருக்கும் பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டரின் உழைப்பும் படத்தின் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது.

சாம் சி.எஸின் இசையில் பாடல்கள் பெரிதாக காதுகளை ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஆக்‌ஷன் படத்துக்குரிய மூடை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். சில இடங்களில் அதிகப்படியாக கேட்கும் ஒலி கேரக்டர்கள் பேசும் டயலாக்குகள் ரசிகர்களைக் கேட்க விடாமல் செய்கின்றன.

டெக்னிக்கலாக முழுமையான தரத்துடன் ஒரு படம் பார்த்த திருப்தியுடன் வரலாம் என்றாலும் கூட ஒவ்வொரு முறையும் விஜய் சேதுபதி தன்னிடம் சிக்கும் போதும் மாதவன் அவரை தப்பிக்க விடக்கூடிய சூழலை வலிந்து திணித்தாற் போலத் தெரிகிறது. ஒருவேளை கதைக்கான சமரசமோ என்னவோ?

‘முட்டை உடைஞ்சுடுச்சுனா முட்டை உடைஞ்சுடுச்சேனு பதறக்கூடாது, உடனே ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டு பிரச்னையை முடிச்சடணும்’, ‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பான்றது, என்ன லாஜிக். அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?’ என்று விஜய் சேதுபதி கேரக்டர் பேசுகிற வசனங்களில் கவனம் ஈர்க்கிறார் வசனகர்த்தா மணிகண்டன். குறிப்பாக கிளைமாக்ஸில் இறந்து கிடக்கும் போலீஸ்காரர்களின் குணத்தைப் பற்றி விஜய் சேதுபதி பேசுகிற நீளமான வசனம் நெத்தியடி.

விஜய் சேதுபதியின் தலைவனான ‘சேட்டா’ ஹரிஷ் பேரடியின் கேரக்டருக்கு முடிவே இல்லாமல் பாதியில் விட்டு விட்டது. சம்பவங்கள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இருப்பது போல தன்னை கற்பனை செய்து கொண்டு சம்பவங்களை தானாகவே யூகித்து மாதவன் ஒரு முடிவுக்கு வருவது, டான் லெவலில் இருக்கும் விஜய் சேதுபதியிடம் பொறுமையாக விசாரணை செய்வது, அவர் சொல்வதையெல்லாம் ஒரு போலீஸ் அதிகாரி முழுமையாக நம்புவது, டிட்டெயில் என்ற பெயரில் நுணுக்கமாகவும், மெதுவாகவும் நகரும் காட்சிகள் இவையெல்லாம் திரைக்கதையின் மெனக்கிடாத பகுதிகள். அதுவே படத்தின் பெரும் பலவீனங்கள்.

‘திருடன் – போலீஸ்’ என்ற பெயரிலேயே தமிழில் ஒரு படம் ரிலீசாகி விட்டது. அந்தளவுக்கு இந்த வகையறா திருடன் – போலீஸ் டைப் கதைகள் தமிழ்சினிமாவுக்கு புதிதல்ல. இருந்தாலும் டெக்னிக்கல் சவுண்ட்டோடு படமாக்கியிருந்த விதத்தில் விக்ரம் – வேதா ஆக்‌ஷன் மாஸ்!

Leave A Reply

Your email address will not be published.