Banner After Header

எமன் – விமர்சனம்

0

RATING : 3/5

‘நான்’ திரைப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜீவா சங்கர் 4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரோடு இணைந்து தந்திருக்கும் பக்காவான பொலிட்டிக்கல் த்ரில்லர் தான் இந்த ‘எமன்’.

சினிமாவில் அரசியல் பின்னணிக் கதைகளுக்கு பஞ்சமில்லை. முன்பெல்லாம் அடிக்கடி வரும் இந்த மாதிரியான படங்கள் சமீபகாலமாக தமிழில் எப்போதாவது தான் வருகிறது. ‘சகலகலா வல்லவன்’, ‘கொடி’ என ஒரு சில படங்களில் சின்னச் சின்னதாய் அரசியலைப் பார்க்க முடிகிறது.

ஆனால் இந்த எமனில் மக்களுக்கு காட்டப்படும் அரசியல் அதிகம் நெருங்கிப் பார்த்திராத சூழல். திரைக்கு அந்தப் பக்கம் என்று சொல்வார்களே? அதைப் போன்று அரசியல்வாதிகளின் இன்னொரு பக்கம். அதை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளுக்கிடையே இருக்கின்ற மோதல், ஏமாற்றம், பதவிக்காக சூழ்ச்சி செய்தல், சதி, பழிக்குப் பழி, தேவைப்பட்டால் மக்களுக்கு தெரியாமல் இருட்டுக்குள் கை குலுக்கிக் கொண்டு கூட்டாக கொள்ளையடிப்பது என அரசியல்வாதிகளின் நிஜ முகம் பல்லிளிக்கிறது படத்தில்!

அதோடு தமிழகத்தில் நடந்து வரும் சமீபத்திய பரபரப்பான அரசியல் சூழலோடும் மிக எளிதாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது இந்த எமனை.

அரசியலில் பதவிக்காக விரோதம், மற்றும் சாதி மறுப்பு எதிர்ப்பால் நடக்கிற சண்டையில் பிறக்கும் போதே அப்பா, அம்மாவை இழந்து தாத்தா சங்கிலி முருகன் அரவணைப்பில் வளர்கிறார் விஜய் ஆண்டனி.

இதனால் அவருக்கு ஊரார் வைத்திருக்கும் பட்டப்பெயர் தான் படத்தின் டைட்டிலான ‘எமன்.’

வளர்ந்து பெரியவன் ஆனதும் வயதான தாத்தாவின் உயிரைக் காப்பாற்ற 4 லட்சம் ரூபாய் வரை ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுகிறது.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்குப் போனால் தாத்தா உயிரைக் காப்பாற்ற அந்தப்பணம் கிடைக்கும் என்று சுவாமிநாதன் மூலம் தெரிய வரவும் அதற்காக ஜெயிலுக்குப் போகிறார்.

அங்கு பிரபல அரசியல் புரோக்கரான மாரிமுத்துவின் தொடர்பு கிடைக்க, அப்படியே அவர் மூலமாகவே நூல் பிடித்தாற் போல ஒவ்வொருவரின் அறிமுகம் கிடைத்து அரசியல் களத்துக்குள் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் தன் அப்பா எந்தப் பதவிக்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரோ? அதே அரசியல் பதவியைப் பிடிக்க அவர் செய்கிற காய் நகர்த்தல்களின் பரபரப்புகள் தான் கிளைமாக்ஸ்.

தன் உடல்வாகுக்கு எந்தக் கதை செட்டாகுமோ அதில் தான் நடிப்பேன் என்பது தான் விஜய் ஆண்டனியின் கொள்கை. அந்த வகையில் இந்தக் கதையும் விஜய் ஆண்டனிக்கு பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே அமைதியான மனுஷன் ஆக்ரோஷமாக சண்டை போட்டாலும் அதிலும் கூட ஒரு அமைதி வெளிப்படுகிறது.

தங்கபாண்டியன் என்கிற கேரக்டரில் வரும் அருள் டி. சங்கர் எங்க இருந்தார் இந்த மனுஷன் என்று கேட்க வைக்கிறார் நடிப்பில்! சின்னச் சின்னதாய் அவர் காட்டுகிற எக்ஸ்பிரஷன்களும், வசன உச்சரிப்பிலும் அருமை அருள் என்று சொல்ல வைக்கிறார். இந்தப்படம் அருளுக்கு இன்னும் பல புதுப்பட வாய்ப்புகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி தான் என்றாலும், அவரோடு பயணிக்கிற மற்ற கேரக்டர்களுக்கும் அதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சியோ? எதிர்க்கட்சியோ? பதவிக்காக அடித்துக் கொள்வதும், அதற்காக ஒருவர் ஒருவர் போட்டுத் தள்ள திட்டம் தீட்டுவதுமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை காலி செய்யவே முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது இதுதான் நிஜ அரசியலோ என்று ரசிகர்கள் கண்டிப்பாக அதிர்ச்சியடைவார்கள்.

சாதிக்காரர்களை வைத்து அரசியலில் பிழைப்பு நடத்துபவராக வருகிற தியாகராஜனின் நடிப்பு கை தட்டல்களை அள்ளுகிற ரகம். அதிலும் தன் சொகுசான அரசியல் வாழ்வுக்காக தன் சாதிக்காரர்களை எப்படியெல்லாம் சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் பதவிக்காக எப்படி தன் சாதிக்காரர்களை அவர்கள் பலி கொடுக்கவும் துணிகிறார்கள் என்பதை தன் கேரக்டர் வழியாக தியாகராஜன் காட்டியிருந்த விதம் சாதிக்கட்சி அரசியல்வாதிகளுக்கு செம சவுக்கடி!

நாயகி மியா ஜார்ஜ் படத்தில் ஒரு நடிகையாக வருகிறார். அவருக்கென்று தனியாக ஒரு பார் சாங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே விஜய் ஆண்டனியோடு கதையில் கோர்த்து விடப்பட்டிருக்கிறார். அதைத்தாண்டி அவரிடம் சிலாகிக்க ஒன்றுமில்லை.

சுவாமிநாதன், சார்லி என படத்தில் வருகிற சின்னச் சின்ன கேரக்டர்களும் படத்துக்கு பக்க பலம்.

இது போன்ற பொலிட்டிக்கல் கதையில் இடையிடையே வரும் பாடல்கள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு எரிச்சலைத்தான் தரும். அதையும் மீறி ‘என் மேல கையை வெச்சா காலி’, ‘டமாலு டுமீலு’ பாடல்களை ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் பல சைனீஸ் படங்களில் கேட்ட பேக் கிரவுண்ட் ஸ்கோர் ஞாபகத்துக்கு வந்து போகிறது.

”எந்த தப்புமே செய்யாம நான் தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்கேன். அப்படின்னா தப்பு செய்றதுக்கான முழுத் தகுதியும் எனக்கு இருக்குன்னு அர்த்தம்”

”அரசியல்ல மட்டும் எதிரி வெளில எங்கேயும் இருக்க மாட்டான்.விசுவாசி ங்கற பேர்ல கூடவே தான் இருப்பான்”. என படத்தில் வருகிற ஒவ்வொரு வசனங்களும் செம ஷார்ப்.

இப்படி ஷார்ப்பான வசனங்கள், விறுவிறுப்பான காட்சிகள் என ஒரு அக்மார்க் பொலிடிக்கர் த்ரில்லருக்குரிய அத்தனை அம்சங்கள் இருந்தாலும் படம் ஆரம்பித்ததிலிருந்து முடிகிற வரை நகர்கிற எல்லாக் காட்சிகளும் அநியாயத்துக்கு ஸ்லோ மோஷனில் நகர்கிறது. என்ன எடிட்டர் வீர செந்தில்ராஜா சார்? நீங்க வேலை செய்யலையா? இல்லேன்னா வேலையை செய்ய விடலையா? அதேபோல சாதாரண ஆளாக தோற்றமளிக்கும் விஜய் ஆண்டனியைப் பார்த்து எல்லா இடங்களிலும் அதிக செல்வாக்குள்ள அத்தனை அரசியல்வாதிகளும் பயந்து நடுங்குவது நம்பும்படியாக இல்லை.

இப்படி சில்லறைக் குறைகள் சில இருந்தாலும் அரசியல் கதையாச்சே? அதற்குள் சில சமரசங்களை செய்ய வேண்டியிருக்குமே? என்கிற எந்தவித பாசாங்கும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே அம்பலப்படுத்தியதற்காக இந்த எமனை துணிச்சலாக எதிர்கொண்டு ரசிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.