படையெடுக்கும் பெண்கள் கூட்டம் : நாளை முதல்பெரிய தியேட்டர்களில் ’36 வயதினிலே’!
எந்த ஒரு முன்னணி நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு நடிகை ஜோதிகாவுக்கு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது.
‘மாஸ்’ ஹீரோ சூர்யாவை திருமணம் செய்த பிறகு சுமார் 8 வருடங்கள் நடிக்காமல் இருந்தார். அவரை ஒரு நல்ல தரமான படத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் சூர்யா.
அவர் எதிர்பார்த்தது போலவே அமைந்த படம் தான் ’36 வயதினிலே’. மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹைவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கான இப்படத்துக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதால் தியேட்டருக்கு வரும் பெண்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சில ஊர்களில் சிறிய தியேட்டர்களில் கடந்த வாரம் ரிலீசான இப்படம் நாளை முதல் பெரிய தியேட்டர்களில் மாற்றப்படுகிறது.
இதுகுறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் “36 வயதினிலே’ படத்தை தமிழகம் முழுவதும் 210 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தோம். இந்தப்படம் இதுவரை 7 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. வசூல் இப்படியே தொடருமானால் சுமார் 18 முதல் 20 கோடி வரை கூடுதலாக வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களுக்கு பெண்கள் குடும்பம் குடும்பமாக வந்த இந்தப் படத்தைப் பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் நாளைமுதல் இந்தப் படம் பல ஊர்களில் பெரிய தியேட்டர்களுக்கு மாற்றப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.
தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதே இல்லை என்கிற நிலையை மாற்றி பெண்களையும், குழந்தைகளும் கவரும் படமாக 36 வயதினிலே இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.