36 வயதினிலே – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

36-kv-review

சூர்யாவை திருமணம் செய்த கையோடு குடும்பத் தலைவியாகி விட்ட ஜோதிகா சுமார் 8 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் படம் தான் இந்த ’36 வயதினிலே’.

மலையாளத்தில் பெரும் வசூலை வாரிக்குவித்த ‘ஹவ் வோல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக் தான் இப்படம். மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

திருமணம் ஆகி விட்டாலே பெண்களின் கனவுகளுக்கு பூட்டு போட்டு விட வேண்டுமா..? கணவர், வீடு, குழந்தைகள் என அவர்களின் வாழ்க்கை ஒரு நாலு சுவற்றுக்குள் வரையறுக்கப்படுகிறது.

அவ்வளவு தானா ஒரு பெண்ணின் வாழ்க்கை. இல்லை அதையும் தாண்டி அதாவது 36 வயதையும் தாண்டி பெண்களின் கனவுகள் ஏராளம். அவர்களின் சாதனைக்கு தடையேதும் இல்லை. அதற்கு எல்லையும் இல்லை. அந்தக் கனவுகள் நனவாக கணவர் ஒரு நண்பனாக கூட இருந்து உற்சாகப்படுத்தினாலே போதும். அவர்கள் விரும்பிய துறையில் அவர்கள் சாதிப்பார்கள்.

இந்த சீரிய கருத்தை வலியுறுத்தி குறிப்பாக ஆண்கள் பார்த்தே ஆக வேண்டிய படமாக ரிலீசாகியிருக்கிறது 36 வயதினிலே.

36 வயதாகும் வசந்தி (ஜோதிகா) தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறாள். அவரது கணவர் ரகுமான் மத்திய அரசின் வானொலி நிலையமான ஆல் இண்டியா ரேடியோவில் அறிவிப்பாளராக வேலை செய்கிறார்.

பார்ப்பது அரசாங்க உத்யோகமாக இருந்தாலும் ரகுமானுக்கு வெளிநாட்டில் வேலைக்கு சென்று அங்கு தனது குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்பது தான் லட்சியம். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கோ வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்பது ஆசை. ரகுமானின் முயற்சியால் அயர்லாந்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. கூடவே மகளையும் மனைவியையும் கூட்டிச்செல்ல திட்டமிடும் போது மனைவி ஜோதிகாவுக்கு விசா மறுக்கப்பட, ரகுமான் தனது மகளுடன் அயர்லாந்து செல்கிறார்.

8 வயது மகளைப் பிரிந்து தனிமையில் இருக்கும் வசந்தி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். திருமணத்துக்கு முன்பு பார்த்த வசந்தி இல்லை இப்போது அந்த வசந்தி ஒரு போராளி. கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பார். ஆனால் இப்போதோ அதெல்லாம் அடங்கி விட்டது.

எங்கே போனது அந்த சாதிக்கும் வெறி? நான் அப்போ பார்த்த வசந்தியை எங்கே..?” அவங்களை நான் மறுபடியும் பார்க்கணும். ஏன்னா என்னோட இன்ஸ்ப்ரேஷனே நீங்க தான்.” என்று ஜோதிகாவுக்குள் இருக்கும் சாதிக்கும் வெறியை தூண்டி விடுகிறார் அவரது கல்லூரியில் ஒன்றாகப் படித்த அபிராமி.

அதுவரை எந்த செயலைச் செய்தாலும் கணவன் ரகுமானிடம் திட்டு வாங்கிக் கொண்டே இருக்கும் வசந்தி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க புறப்படுகிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா..? அவருடைய கனவுகளுக்கு உயிர் கொடுத்தாரா..? இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

Related Posts
1 of 4

தன் காதல் மனைவி ஜோதிகாவின் ரீ-எண்ட்ரிக்காக இப்படி ஒரு அர்த்தமுள்ள படத்தை தயாரித்த சூர்யா உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

படத்தில் வசந்தியாக வருகிறார் ஜோதிகா. குஷி படத்தில் பார்த்த துறு துறு நடிப்பும், மொழி படத்தில் பார்த்த அமைதியான நடிப்பும் என இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட கேரக்டருக்கு உயிரூட்டி நடித்திருக்கிறார்.

ஒரு குழந்தையின் தாய் எப்படி இருக்க வேண்டும்? அல்லது எப்படி இருப்பாள்? அந்த 36 வயதின் மனப்பக்குவங்களை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார். லேட் பிக்கப் என்பதை விட லேட்டாக வந்தாலும் ஜோதிகா பிக்கப் ஆகி விடுவார் என்பதே சரி.

ஜோதிகாவின் கணவராக ரகுமான் வருகிறார். ஒரு ஆணாதிக்கம் கொண்ட ஒரு கணவனின் எண்ண ஓட்டங்களை அவரது கேரக்டர் பிரதிபலிக்கிறது. இன்றைக்கும் மனைவி என்பவள் எப்போதுமே தனக்கு கீழ் தான். கணவன், வீடு, குழந்தை, குடும்பம், மாமியார், மாமனார் அவர்களின் அதிகபட்ச சந்தோஷம் அவ்வளவு தான் என்கிற மனநிலையோடு மனைவிகளைப் பார்க்கும் கணவர்மார்களுக்கு அவருடைய கேரக்டர் ஒரு சரியான செருப்படி.

மாமனாராக வரும் டெல்லி கணேஷ், ஜவுளிக்கடை முதலாளியாக வரும் ஜெயப்பிரகாஷ், போலீஸ் கமிஷனராக வரும் நாசர் தோழியாக வரும் தேவதர்ஷிணி என படத்தில் வருகின்ற எல்லா கேரக்டர்களுமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

”நாலு ஆம்பள பசங்களை பெத்தேன், ஒருத்தனும் பார்க்க வரல… அப்பத்தாம்மா தோணுச்சு. ஒரே ஒரு பொண்ணு மட்டும் இருந்திருந்தா…” என்று வயதான காலத்தில் தனது இயலாமையை ஒரு ஆயா ஜோதிகாவிடம் சொல்லி அழும்போது கல் நெஞ்சம் கூட கரைந்து விடும். கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும்.

சக பெண்கள் மத்தியில் தன்னைப் பற்றி பெருமைப் பேசுவதும் பெண்களுக்கே உரிய கலை. அதை தேவதர்ஷிணி – ஜோதிகா காம்பினேஷன் காட்சிகளில் அழகாக்கியிருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையில் ‘வாடி ராசாத்தி’, ‘ஹேப்பி’, ‘போகிறேன்’ மூன்று பாடல்கள். மூன்றுமே மனதை மயக்கும் மெல்லிசை.

பெண் கதாபாத்திரத்தை சுற்றும் திரைக்கதைக்கு பக்கபலமாக இருப்பது விஜியின் ‘நச்’ வசனங்கள் தான். ”ஒரு பொண்ணுக்கு நீங்க அப்பாவா இருக்க முடியும். ஆனா எந்த காலத்திலேயே நீங்க ஒரு அம்மாவா ஆகவே முடியாது” மாதிரியான வசனங்கள் எல்லாமே கைதட்டல்களை வலிய வாங்கிக் கொள்கின்றன.

கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் ரோஸன் ஆண்ட்ரூஸ்.

திருமணத்துக்குப் பிறகு 36 வயதைத் தாண்டி விடும் பெண்களின் ஏக்கங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும். என்பதை ஜோதிகா என்கிற கேரக்டரில் புகுத்தி ஆண்கள் சமூகம் பெருமைப்படக்கூடிய வகையில் இயக்கித் தந்திருக்கிறார். அந்த மேம்பட்ட எண்ணத்திற்காகவே இந்த ராசாத்தியை ஆரத்தி எடுத்து வரவேற்கலாம்.