அச்சாரம் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

acchaaram

னக்கு நிச்சயமான பொண்ணை இன்னொருத்தன் வந்து காதலுங்கிற பேர்ல லவட்டிக்கிட்டுப் போனா மாப்பிள்ளையாகப் போறவனுக்கு கடுப்பு வருமா..? வராதா..?

அந்த கடுப்புல ஹீரோயினை பழி வாங்கக் கெளம்புற ஹீரோவோட நெலைமை என்னவா ஆகுங்கிறதை சொல்லியிருக்கிற படம் தான் இந்த ‘அச்சாரம்.’

நேர்மையான போலீஸ் ஆபீசரான கணேஷ் வெங்கட்ராமுக்கு மேரேஜ் பண்ணி வைக்க நினைக்கிறார் அம்மா கடலோரக்கவிதைகள் ரேகா.

”இப்போ என்னம்மா அவசரம்?”னு  சொன்னாலும் அம்மாவோட பேச்சுக்கு கட்டுப்பட்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

ரேகாவும் அவரோட உறவுப்பொண்ணான ஹீரோயின் பூனம் கவுரை மகனுக்கு பேசி முடிக்கிறார்.

பூனம் கவுரோ இன்னொரு ஹீரோ முன்னாவோட டீப் லவ்ல இருக்காப்ல.

எங்க… வீட்ல சொன்னா அப்பா நம்மளை தாளிச்சிருவாரோன்னு பயந்து போய் மேட்டரை அப்படியே கேஷுவலா விட்டுட்டு கரெக்ட்டா முகூர்த்த நாள் அன்னைக்கு  லவ்வரோட ‘க்ரேட் எஸ்கேப்’ ஆகிறார்.

”அந்தப் பொண்ணுக்கே உன்னை புடிக்கலையே இனிமே உன்னை எவ கட்டிப்பா..?”ன்னு கல்யாணத்துக்கு வந்திருந்த உறவுக்காரங்க எல்லாம் கணேஷ் வெங்கட்ராமை கிண்டல், கேலி செய்றாங்க. அதை பார்க்கிற அம்மா ரேகா அவமானம் தாங்காம அங்கேயே துப்பாக்கியால சுட்டுக்கிட்டு செத்துப் போயிடுறார்.

இதனால மனசு நொந்து போற கணேஷ் வெங்கட்ராம் தன்னை ஏமாத்திட்டு, அம்மா சாவுக்கு காரணமான அந்த காதல் ஜோடியைத் தேடி பழி வாங்கக் கெளம்புறார்.

அது நிறைவேறிச்சா இல்லையா?ங்கிறது தான் கிளைமாக்ஸ்.

Related Posts
1 of 4

‘அபியும் நானும்’ படத்துல த்ரிஷா லவ் பண்ற ‘பஞ்சாப் சிங்’ மாப்பிள்ளையா வந்து கலக்கிய கணேஷ் வெங்கட்ராம் இந்தப் படத்துல ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசரா நல்ல மெடுக்கா அவரோட உசரத்துக்கு கச்சிதமாப் பொருந்திப் போன கேரக்டர்ல நடிச்சிருக்கார்.

எப்படி ‘புரியாத புதிர்’ படத்துல நடிகர் ரகுவரன் ‘ஐ நோ’, ‘ஐ நோ’ன்னு சொல்லி ரேகாவை டார்ச்சர் பண்ணுவாரோ. அதே மாதிரி இதுல ‘ஐ லைக் யூ’, ‘ஐ லைக் யூ’ன்னு சொல்லியே காதல்ங்கிற பேர்ல கல்யாணத்துக்கு முன்னாடி தப்பா போற பொண்ணுங்களை வரிசையா போட்டுத் தள்ளுறார்.

பூனம் கவுரோட வீட்டுக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் அவரை தப்பான நோக்கத்துல பார்க்கிறப்போ படம் பார்க்கிற நமக்கும் ”என்ன இவ்ளோ கேவலமா நடந்துக்குறாப்ல” என்று கோபம் வருகிறது.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு அவருடைய அந்த மோசமான பார்வைக்கு ப்ளாஷ்பேக் சொல்லும் காட்சிகள் நம் எண்ணத்தையே மாத்தி அவர் மீது பரிதாபப்பட வைத்து விடுகிறார் இயக்குனர் மோகன் கிருஷ்ணா.

வீட்டுக்குள்ள ‘குடும்ப குத்து விளக்காட்டம்’ இருக்கிற பூனம் கவுர் வெளியில வந்துட்டா ‘குத்துற விளக்கா’ மாறுகிற காட்சிகள் செம ‘கிக்’கான காட்சிகள்.

அதிலும் தனக்கு காதலனாக வரும் முன்னாவுடன் எந்தக் கூச்சமும் இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில் கூடி கும்மியடித்திருக்கிறார். முன்னாவும் ஒரு அமைதியான பாந்தமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எல்லமே ஏற்கனவே கேட்ட மெட்டுக்களாக இருந்தாலும் மறுபடியும் ஒரு தடவை கேட்கிற மெட்டுக்களாக இருப்பது ஆறுதல்.

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தாவை ஓப்பனிங் குத்து பாட்டுக்கு ஆட விட்டிருக்கிறார்கள். அந்த மாநிற அழகு தேவதையா ‘ஐட்டம் டான்ஸ்’ ஆடுதுன்னு நெனைக்கிறப்போ மனசே ஆறலீங்க…!

பழி வாங்கும் கதையை த்ரில்லர் பட பாணியில் தர நினைத்த இயக்குனர் அதன் போக்கில் போகாமல் அம்மா- மகன் செண்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

அதனாலேயே த்ரில்லர் படத்துக்குரிய விறுவிறுப்பு குறைகிறது. அந்த ஏரியாவை மட்டும் கொஞ்சம் பட்டி பார்த்திருந்தால் உண்மையிலேயே ‘அச்சாரம்’ போட வேண்டிய படம் தான்.