‘கனா’ பட புகழ் தர்ஷன் நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார், பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் உடன் இணைந்து தனது வரவிருக்கும் புதிய படத்திற்கு கதை, வசனம் எழுதுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘சேத்துமான்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஹிருதயம்’ போன்ற படங்களில் தனது இயல்பான மற்றும் அற்புதமான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களை கவர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் தமிழ் பேசும்போது, “நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களை ஊக்குவிக்கும் எஸ்.வினோத் குமார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்றிருப்பது உண்மையில் பெரிய பாக்கியம். அனைவருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை மீண்டும் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் உருவாக்குவதில் கிடைக்கும் அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்” என்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 1, 2023) காலை பெங்களூரில் தொடங்கியது. படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.