புதிய படங்களில் நடிக்கும் பூர்ணிமா ரவி!

Get real time updates directly on you device, subscribe now.

நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஷோபா முதல் த்ரிஷா வரை தமிழ் சினிமாவில் இதற்குப் பல உதாரணங்களை சொல்ல முடியும். இவர்கள் இயல்பான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் என்றாலும் சவாலான கதாநாயகி என்றாலும் சரி சிறப்பாக நடித்திருப்பார்கள். இவர்களைப் போலவே, பூர்ணிமா ரவி பல்வேறு ஊடக தளங்களில் வெவ்வேறு பாத்திரங்களில் திறனை வெளிப்படுத்தி, தனது அனைத்து முயற்சிகளிலும் நிரூபித்து வருகிறார். இதே ஆர்வத்தோடு தனது திறமையை இன்னும் செழுமைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் அவர் தான் விரும்பிய கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் சவால்களை எதிர்கொண்டார். ஆனால் இப்போது, அவரை முதன்மைப்படுத்தி (female lead characters) நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தனக்குப் பிடித்த நடிகர் என தனுஷைக் குறிப்பிடுபவர், எந்த கதாபாத்திரத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் தனுஷ் செல்வது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றார். இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருப்பதாக பூர்ணிமா கூறுகிறார். ’ஹீரோயின் மெட்டீரியல்’ என்று சினிமாவில் எதுவும் இல்லை என்பவர், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.