ஆதித்ய வர்மா-விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING : 3/5

தன் மகன் அறிமுகம் ஆகும் முதல் படமே முத்திரைப்பதிக்கும் படமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் நடிகர் விக்ரம் தெலுங்கில் செம்ம ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தைத் தேர்ந்தெடுத்தார். படம் நெடுக முத்திரைப் பதித்தாரோ இல்லியோ நிறைய முத்தங்களைப் பதித்து இளைஞர்கள் மத்தியில் கம்பீரமாக வீற்றிருக்கும் லாவகத்தை முதல் படத்திலே தட்டி இருக்கிறார் துருவ் விக்ரம். அவருக்கு முதல் வாழ்த்துகள்.

கோவக்கார மருத்துவ இளைஞன் துருவ். அவருக்கு பனிதா சந்துவைப் பார்த்ததும் காதல். அதன்பின் உடனே காமம் பகிர்தல். அதற்கு மேல் சாதி முதல் காரணமாய் அவர்களின் காதலை எதிர்த்து நிற்க காதலர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது தான் கதை.

ரொம்ப அரதப்பழசான கதை என்றாலும் படம் மேக்கிங்கில் அசத்துகிறது. ஆனால் கருத்தியல் ரீதியாக படம் நிறைய அபத்தங்களை சுமந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. படத்தில் நாயகன் எந்நேரமும் குடியைச் சுமந்தே திரிகிறார். மருத்துவரான அவர் குடித்துவிட்டு தான் ஆபரேசன் செய்வார். மேலும் செக்ஸ் வச்சிக்க மட்டும் வர்றீயா என்று நேரடியாக ஒரு நடிகையிடம் கேட்கிறார். இதை எல்லாம் நோட் செய்யும் ஒரு மாணவப்பருவத்து பையனுக்குள் என்ன மாதிரியான சிந்தனை வரும்? இதெல்லாம் இயக்குநரும் நடிகரும் யோசிக்க மாட்டார்களா? சமூகப்பொறுப்பு ஒவ்வொரு கலைஞனுக்கும் அவசியம் அல்லவா?

மிக வேகமான வாழ்க்கை முறைக்கு நாம் மாறினாலும் நம்மிடம் மிச்சமிருக்கும் ஒருசில நாகரீகத்தையும் பழைமை என்று தூக்கிப்போட்டு விடக்கூடாது. அதை திரைக்கலைஞர்கள் ஊக்குவித்து விடக்கூடாது.

நடிப்பில் துருவ் பாஸ் மார்க்கை விட மாஸ் மார்க்கே வாங்குவார் போல. மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். மேலும் லவ், ஆக்‌ஷன், எமோஷ்னல் என ஆல் ஏரியாவும் அவருக்கு அசால்ட்டாக வருகிறது. நாயகி பனிதா சந்து கேப் விடாமல் முத்தம் கொடுக்கும் காட்சிகள் தவிர்த்து சில காட்சிகளில் நடித்திருக்கவும் செய்கிறார். வசனங்கள் நிறைய இடங்களில் சரியாக காதில் விழாததிற்கு பின்னணி இசை காரணமாக இருக்கலாம். பாடல்கள் எதுவும் எக்ஸ்ட்ரா லோடாக தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரப்படம் என்பதால் கொஞ்சம் அலுப்பத்தட்டவும் செய்கிறது. பின்பாதி படம் போலவே முன்பாதி படத்தையும் வேகமாக இழுத்துச் சென்றிருக்கலாம்.

கேமரா வொர்க்கும், ஆர்ட் டிப்பார்ட்மெண்டும் ஆதித்யவர்மாவின் கரம் காத்த அரண்கள்.

அர்ஜுன் ரெட்டி பார்த்தவர்களுக்கு ஆதித்யவர்மா பெரிய திருப்தி தராது. அர்ஜுன் ரெட்டி பார்க்காதவர்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் இளைஞர்களுக்கு இப்படம் போதை மாத்திரை தான்!