அடுத்த சாட்டை- விமர்சனம்
ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்ணால் வரும் தரத்தை விட அறம் தான் முக்கியம் என்பதை சொல்லும் படம் அடுத்தசாட்டை. மேலும் இந்தச்சாட்டை மாணவர்களை விட ஆசிரியர்களுக்கே அதிகமாக பாடம் எடுக்கிறது.
சமுத்திரக்கனி பல படங்களில் வழக்கம் போல் எடுக்கும் அட்வைஸ் சாட்டை தான் படம். உடல்மொழியை விட வசன மொழிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார். அதுல்யாவின் நடிப்பிலும் நல்ல மெச்சூட் தெரிகிறது. குறிப்பாக இடைவேளை சீக்வென்ஸில் அதகளம் செய்திருக்கிறார். தம்பிராமையா பல இடங்களில் நம் செவிகளைப் பதம் பார்த்தாலும் பல இடங்களில் அவர் தான் சிரிக்கவும் வைக்கிறார். படத்தில் ஜாதிக்கயிறு என்ற விசயத்தை ஆழமாக தொட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. அதை ஆசிரியர்கள் கூட ஊக்குவிக்கிறார்கள் என்று ஓப்பனாக சொன்னது பொளேர்
கல்லூரி மாணவர்களின் நடிப்பிலும் ஒருசிலரைத் தவிர மற்றவர்களிடம் ஒரு எதார்த்தம் தெரிகிறது. இந்தப்படத்திற்கு ஏன் மாஸான பைட்? என்று கேட்க விடாமல் சண்டைக்காட்சிக்கான இடத்தை திரைக்கதையில் இட்டு நிரப்பி இருக்கிறார் இயக்குநர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை தாளம் போட வைக்கும் வகையில் இல்லாவிட்டாலும் காட்சிகளுக்கு ஏற்ற உணர்வை இசை வழியே தந்திருக்கிறார். மேலும் இந்தப்படத்திற்கான அளவு என்ன? என்பதை எப்படி வரையறுத்தாலும் இது படமல்ல பாடம் என்பதாகத்தான் முடியும். பாடம் வாசிக்க கேட்க போரடித்தாலும் அது வாழ்க்கைக்கு நல்லது என்பதால் இந்த அடுத்த சாட்டையை நாம் ஆதரித்தே ஆக வேண்டும்
3/5