அஜித்தின் அன்பில் நெகிழ்ந்து போன ‘அப்புக்குட்டி’ என்கிற சிவபாலன்
எளிய மனிதர்களிடம் அன்பு காட்டுவதிலும், அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட ஆலோசனை சொல்வதிலும் எப்போதுமே சளைக்காதவர் நடிகர் அஜித். அவருடைய படப்பிடிப்புக்கு சென்றால் அதை கண்கூடாகப் பார்க்க முடியும். அவருடனான நட்பின் அனுபவங்களை சிலாகித்துச் சொல்லுவோர் லிஸ்ட்டை எடுத்தால் அது நீண்டு கொண்டே போகும்.
அப்படி ஒரு அனுபவம் தான் சமீபத்தில் கிடைத்திருக்கிறது நடிகர் அப்புக்குட்டிக்கு.
அது என்ன என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்…
‘வீரம்’ படத்தில் அஜித் சாரோடு சேர்ந்து நடித்த போது அஜித் சார் என்னிடம் ”தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்தவரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமிய படங்களை தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும்” என்று ஆலோசனை சொன்னார்.
நானும் என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க, யார் சார் படம் பிடிப்பாங்க என்று கேட்டேன். புன்னகையோடு விடை பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29-ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன்.
எங்கே, என்ன, எது எனக் கேட்காமல், அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கு பிறகுதான் தெரிந்தது, அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போகிறார் என்று. அதை விட ஆச்சரியம் என்னவென்றால், என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்கப்பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட பிரத்யேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப்படுத்தி இருந்தார்.
ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை. தவிர எனது இயற்பெயரைக் கேட்டு தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவபாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை ‘சிவபாலன்’ என்கிற ‘அப்புக்குட்டி’ என்றே அழைக்கப்படுவதை விரும்புகிறேன்.
ஒரு கைதேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும், தொழில் நேர்த்தியும் என்னை பரவசம் ஊட்டியது.
புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இது என்னால் மறக்க முடியாத ஒரு நாளாகும் என தெரிவித்தார் சிவபாலன் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் அப்புகுட்டி என்கிற சிவபாலன்.