சிம்புவால் 20 கோடி நஷ்டம்; வீடு, வாசலை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டேன்! – ‘AAA’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கண்ணீர்

திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த இந்தப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. அதோடு தயாரிப்பாளருக்கு பெருத்த பண நஷ்டத்தையும் கொடுத்தது.

இதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்ட வேண்டுமென்று சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அன்பானவன், அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பில் சிம்பு செய்த அட்டூழியங்களை நேற்று நிருபர்களை சந்தித்து பட்டியலிட்டார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

அப்போது அவர் பேசியதாவது, ஏப்ரல் 9-ம் தேதி இந்தப் படத்துக்கு பூஜை போட்டோம். மே மாத இறுதியில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டோம்.

படப்பிடிப்புக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது, சிம்பு ஒவ்வொரு லோக்கேஷனையும் மாற்றிக் கொண்டிருந்தார். மதுரையில் ரொம்ப வெஇயில் இருக்கும், மைசூர்ல போய் பாருங்க என்றார். பார்த்தோம். கோவா என்றார். கொச்சின் என்றார். பார்த்தோம், மாதங்கள் கடந்தது. கடைசியில் திண்டுக்கல் என்று லோக்கேஷனை நாங்களே முடிவு செய்தோம். வர மாட்டேன் என்றார். ஸ்டார் ஓட்டல் இல்லை என்றார். பொது இடத்தில் நடிக்க வரமாட்டேன் என்றார். கூட்டம் அதிகமாக இருந்தால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்றார். ஞாயிற்றுக்கிழமை வர மாட்டேன் என்றார். இதையெல்லாம் மீறி மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூலை 9-ம் தேதி திண்டுக்கல்லில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

படப்பிடிப்பு தேதியை அவரே தேர்வு செய்வார். அவரே கால்ஷீட் நேரத்தையும் தேர்வு செய்வார். ஆனால் அவர் சொன்ன கால்ஷீட் நேரத்தில் ஒரு நாளும் வந்தது இல்லை. வரவும் மாட்டார். ஒவ்வொரு நாளும், படப்பிடிப்பு முடிந்த காட்சிகளை ரூமில் பார்த்து விடுவார்.

”நடிகர் சிம்புவை வைத்து நான் ‘ஏஏஏ’ படத்தை எடுத்தேன். அவரை படத்தை கமிட் செய்த உடனே மொத்த பொறுப்பையும் அவர் கண்ட்ரோலில் எடுத்துக் கொண்டார். அந்த நாள் முதல் எங்களுக்கு தொந்தரவு தொடங்கி விட்டது. காலை 10 மணிக்கு ஷூட்டிங் என்றால் மாலை 5 மணிக்குத்தான் வருவார். பல நாட்கள் படப்பிடிப்புக்கு வராமலேயே இருந்துள்ளார். சரியாக பதில் சொல்லவும் மாட்டார். இயக்குனருடன் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கவும் மாட்டார். இதனால் குறிப்பிட்ட தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாது. டப்பிங், புரமோஷனுக்கும் வராமலும் இழுத்தடிப்பார்.

இப்படி பல வழிகளில் எனக்கு இடைஞ்சல்கள், தொல்லைகள் ஏற்பட்டு எனக்கும் அந்த படத்தால் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவரை வைத்து ஏற்கனவே படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும், எடுத்துச் சொல்லியும் கூட நான் திருந்தி விட்டேன் என்று சிம்பு சொல்லியதை நம்பி அவர் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்தேன். இப்போது அவரை நம்பி நான் பைனான்சியர்களிடம் வாங்கிய கடனை கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன். இதற்கு சிம்பு தான் முழுப்பொறுப்பு, அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் படம் தயாரித்தேன். அதனால் இந்த நஷ்டத்தை அவர் தான் சரி கட்ட வேண்டும்.

சிம்பு எனக்கு கால்ஷீட் தருவதாக கூறினார். அவருடைய வீட்டுக்கு சென்று பேசும் போது “நான் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவேன். என் மீது எந்த புகாரும் இல்லை. எல்லாவற்றையும் உணர்ந்து விட்டேன். ஐந்தாயிரம் ரூபாய் கூட என்னிடம் இல்லை. என்னை சுற்றி பத்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டுவதற்கு கூட பணம் இல்லை. பணத்தின் அருமையையும் இப்போது உணர்ந்து விட்டேன். எனவே ஒழுங்காக நடிக்க முடிவு செய்து உள்ளேன். என்னை வைத்து படம் எடுங்கள். கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று பேசினார்.

ஜனவரியில் படப்பிடிப்புக்கு திட்டமிட்டு இருந்தோம். அவர் தேதி கொடுத்துவிட்டு இரண்டு முறை நாயகி மும்பையிலிருந்து இங்கு வந்து தங்கியிருந்த போது கூட அவர் படப்பிடிப்புக்கு வரவவில்லை. இதைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்க வீட்டுக்கு சென்ற போது நாலு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை காத்திருக்க வைத்தார். அவர் முதலில் சொன்னது போல் நடந்து கொண்டதே இல்லை. முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை.

படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. இப்படி தலையிட்டு மொத்தமாக படத்தையே கெடுத்து விட்டார் சிம்பு. இப்போ நான் தான் மொத்தமா பணத்தை இழந்து, விநியோகஸ்தர்கள், கடன்காரர்கள் என அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

சிம்புவின் சம்பளப் பணத்தை அவர் அப்பாவிடம் தான் கொடுத்தேன். அவர் தான் கை நீட்டி வாங்கினார். சம்பளம் வாங்கிக் கொண்டு படப்பிடிப்பு வரவில்லை என்று அவர் அப்பாவிடம் கேட்டால் அதை நீங்கள் சிம்புவிடம் தான் கேட்க வேண்டும் என்று கை விரித்து விட்டார். பல தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்கிறீர்களா?. அவர் சரியாக படப்படிப்புக்கு வரவே மாட்டார் என்று சொன்னார்கள். அதையும் மீறி நான் திருந்தி விட்டேன் என்று என்னை நம்ப வைத்து படம் எடுக்க வைத்து விட்டார். உதாரணமாக 10-ம் தேதி படப்பிடிப்பு நடத்த திட்டம் போட்டு இருந்தால், எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு அடுத்த வாரத்தில் நடித்து கொடுத்து விடுகிறேன் என்று சொல்லுவார்.

2 – 10 மணி கால்ஷீட் என்றால் 10 மணிக்கு சிம்பு வருவார். அவர் வந்து 5 நிமிடம் கூட நடிக்க முடியாதுன்னு போவார். இப்படி எனக்கு பல விதத்தில் கஷ்டங்களை கொடுத்து உள்ளார். அவர் எப்போதுமே சொன்னது போல் நடந்ததே இல்லை. இப்போது அவர் இந்தப் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை தந்து விட்டால் போதும். மற்றபடி நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால் இந்தப்படமே அவர் கொடுத்த நம்பிக்கையினால் தான் தயாரித்தேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

Anbanavan Asaradhavan AdangadhavanMichael RayappanProducer Michael RayappanSilambarasanSimbuSTR
Comments (0)
Add Comment