ஹீரோக்களுக்காக பாட்டெழுத சினிமாவுக்கு வரவில்லை -சினேகன்!

ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப்படத்தின் டீசரை தயாரிப்பாளரின் தாயார் கமலாதேவி பஞ்சலிங்கம் வெளியிட, இயக்குனர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அதனை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் இரண்டு மரக்கன்றுகளையும் பரிசாக வழங்கி ஆரம்பமே அசத்தலாக இந்த நிகழ்ச்சி துவங்கியது.

இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது,

“இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் என்னை பாடல் எழுத அணுகியபோது, படத்தின் பட்ஜெட் குறித்து பேசி எப்படியாவது என்னை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என முயற்சித்தார். என்னை பொறுத்தவரை ஐநூறு ரூபாய்க்கு பாட்டு எழுதிய போதும் சரி, தற்போது மூன்று லட்ச ரூபாய்க்கு பாட்டு எழுதும்போதும் சரி.. சினிமாவுக்குத்தான் பாட்டு எழுதி வருகிறேனே தவிர, நடிகர்களுக்காகவோ பணத்துக்காகவோ பாட்டு எழுத வரவில்லை. பத்து படங்களில் மூன்று படங்களுக்கு பணம் வாங்காமல் தான் பாட்டு எழுதி தருகிறேன்.

ஈழத்தமிழர்களை உலகத்தமிழர்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்டதுமே நான் பயந்துவிட்டேன். ஒருமுறை சதுரகிரி மலைக்கு சென்றபோது அங்கே இருக்கும் சித்தர்கள் மூலமாக நேரிலேயே நடந்த அதிசய நிகழ்வு ஒன்றை பார்த்து அதிசயித்தேன். அப்போதுதான் செடிகளுக்கும் பூக்களுக்கும் கூட எவ்வளவு வீரியம் இருக்கிறது என்பது புரிந்தது. இந்த கதையும் அதை எனக்கு உணர்த்தியது” என்றார்.

Aaragan movieActor Michal thangaduraiActress kavipriya