நடிப்பு தாகம் உள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் விட்டுவைக்காது.. உடனே சென்னையை நோக்கி படையெடுக்க வைக்கும். அப்படி நடித்து பெரிய நடிகராகி புகழ்பெற வேண்டும் என்கிற கனவுடன் தினமும் கோலிவுட்டை நோக்கி படை எடுத்து கொண்டிருப்போர் பலர்.
அவர்கள் மத்தியில், சமூக விழிப்புணர்வு காரியங்களை செய்துவரும் ஒருவர் தானும் சினிமாவில் நடிகனாக மாறி ஓரளவு புகழ் பெற்றால் அதன்மூலம் அந்த விழிப்புணர்வு குறித்த விஷயங்களை மக்களிடம் இன்னும் பரவலாக கொண்டுபோய் சேர்க்க முடியுமே என்கிற எண்ணத்தில் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார் என்றால் அது நிச்சய்ம் ஆச்சர்யமான விஷயம் தான்.
அதிசயக்கத்தக்க அந்த மனிதனின் பெயர் சிதம்பரம். அதன் முதல் படியாக கர்ணன், ருத்ர தாண்டவம் படங்களில் ரசிகர்கள் கண்களில் படும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சிதம்பரம், வரும் நாட்களில் அவர்களது மனதில் பதியும் நடிகராக மாறுவேன் என்கிறார்.
தென்காசியை சேர்ந்த சிதம்பரம், என்ஜினீயரிங் படித்துவிட்டு குற்றாலம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணிபுரிந்து வருகிறார் அதேசமயம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பல விஷயங்களை முன்னெடுத்து செய்துவரும் சிதம்பரம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் மேம்பாடு சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இவர் தென்காசி கால்பந்து விளையாட்டு சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்..