திரைப்பட விழாக்களில் பிரபலங்களை வாழ்த்த கூப்பிடுவதும், கூப்பிட்ட குரலுக்காக பிரபலங்கள் மெனக்கிட்டு ஓடி வருவதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம்.
இதனாலேயே சில திரைப்படக் குழுவினர் தங்கள் திரைப்படத்தில் பணியாற்றிவர்களை மட்டுமே மேடையேற்றி அழகு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் சில புத்திசாலி இயக்குநர்கள் யாராவது ஒரு பிரபலத்தை தங்கள் படத்தில் ஏதாவது ஒரு ஏரியாவில் கமிட் செய்து விடுகிறார்கள்.
‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கியிருக்கும் படம் தான் ‘ரம்’. ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? இளவட்டங்களின் சாய்ஸ் அனிருத். அதனாலோ என்னவோ இன்று நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தின் புகழ் நிகழ்ச்சி நடந்த அரங்கம் முழுவதும் பரவியது.
நிகழ்ச்சிக்கு காமெடி நடிகர் விவேக்கும் வந்திருந்தார். அவர் ஒருவர் போதாதா? அனிருத் எப்போதுமே எனக்குச் செல்லம் என்று ஆரம்பித்தவர் அனிருத் வெட்கப்படுகிற அளவுக்கு செழிக்க செழிக்க பாராட்டி தள்ளி விட்டார்.
”இந்தப்படத்துல நான் நடிக்கிறப்ப ஷூட்டிங் போன மாதிரியே தெரியல, ஒரு பிக்னிக் போன பிலிங்ஸ் தான் இருந்துச்சு. ஏன்னா எல்லாருமே யூத் பசங்க. அவங்க எல்லாரும் நான் நடிச்ச படங்களோட காமெடி சீன்களை சொல்லிக் காட்டினப்போ நான் அசந்து போயிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் தாண்டிப்போகும் போதெல்லாம் இந்த பசங்க எழுந்திருச்சி நிப்பாங்க. எனக்கே அது ஒரு மாதிரியா இருந்துச்சு. அப்புறம் நானே எதுக்கு எழுந்திருச்சு நிக்கிறீங்க. நாம எல்லாருமே ”பிக்கப்பு… ட்ராப்பு… எஸ்கேப்பு…ன்னு ஒரே மாதிரி ஆளுங்கதாம்ப்பான்னு சொன்னேன்.
இளைஞர்களோட மனசை இசையால கவர்வதுங்கிறது அவ்வளவு ஈஸியில்லை. ஆனால் அனிருத் தன்னோட இசையால் அதை செஞ்சிட்டு வர்றார். எனக்கு எப்போதுமே பிடிச்ச இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா தான். அப்படிப்பட்ட இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிருத். தமிழ் ரசிகர்கள் யாரையுமே அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்க மாட்டாங்க. ஆனால் அனிருத்தை அங்கீகரிச்சிருக்காங்கன்னா அவரோட இசை அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில போய்ச் சேர்ந்திருக்குன்னு தான் அர்த்தம்.
ஹாலிவுட்ல எல்லாம் ஒரே மாதிரியான இசையைத்தான் படம் முழுக்க தருவாங்க. ஆனா அனிருத் ஒரு படத்துல லவ், அம்மா செண்டிமெண்ட், காமெடின்னு ஐந்து வகையான ஜானருக்கும் ஐந்து வகையான பின்னணி இசையைத் தருவார். அப்படிப்பட்ட அவரோட இசை தமிழகத்தை தாண்டி, இந்தியாவைத் தாண்டி உலகம் முழுக்க இசை போய்ச் சேரணும்” என்று உற்சாகமாக கூறினார் நடிகர் விவேக்.