‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா; வில்லனாக பிரசன்னா : இரண்டாம் பாகத்துக்கு சுசி கணேசன் போட்ட ப்ளான்!

ஜிஎஸ் நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

“உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், இரண்டாம் பாகத்துக்கு விறுவிறுப்பைக் கூட்ட சுசி கணேசன் போட்ட ப்ளான் தான் பாபிசிம்ஹாவும், பிரசன்னாகவும் கமிட்டாகியிருப்பது!

ஆமாம் இந்த இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்! இந்த இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டிலும் சிக்கிக் கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

முதல் பாகத்தை போல, வருகிற ஒவ்வொரு சின்ன கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒரு வித ‘திருட்டுத்தனத்தின் சாயல் படர்ந்திருப்பது இதிலும் தொடர்கிறது!’. “பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக் காணோம்..!.

சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய உந்து சக்தி” என்கிறார் இயக்குநர் சுசி கணேசன்.

மீண்டும் தொடர்ந்து “பாகம் 2, 3…. என்பது பொதுவாக கதாநாயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும், சில நேரங்களில் கதை கருவையும் மையப்படுத்தும்!. “கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும்”-பின்புலம் இன்றும் என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால், இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது…” என்றார்.

முதல் பாகத்தின் பெரும்பகுதி ஆஸ்திரிலேயாவில் படப்பிடிப்பு நடைபெற்றதை போலவே, திருட்டுப்பயலே-2-விற்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் உணர்வு, ஒவ்வொரு திருமணமான பெண்ணையும் உருக வைக்குமாம்.

 

AGS Entertainment Kalpathi S. Aghorambobby simhaPrasannaSusi GaneshanThiruttu Payale 2
Comments (0)
Add Comment