மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக வந்து கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஹீரோ ஆசை காட்டியவர் இயக்குநர் சிம்பு தேவன்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்ற இப்படத்துக்குப் பிறகு மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடிப்பை அறவே தவிர்த்தர் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் சமீபகாலமாக மற்ற ஹீரோக்களின் படங்களில் மீண்டும் காமெடி கேரக்டர்களில் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
இதற்கிடையே ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் என ஜூலை மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர்.
அதன்படி இன்று ஆகஸ்ட் 23ம் தேதி 2ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும்
இப்படத்தை ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கிறதாம்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை நீரவ் ஷாவின் உதவியாளர் சரவணனும், எடிட்டிங்கை விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை டி.முத்துராஜும் கவனிக்கிறார்கள்.
முதல் பாகத்தைப் போலவே அதிக பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக அஜித்துடன் ‘பில்லா 2’ படத்தில் ஜோடி சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார்.
2008ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்டு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய பட்டங்களை வென்ற பார்வதிக்கு ‘பில்லா 2’ படம் படுதோல்வி அடைந்ததால் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அவருக்கு தமிழில் அமையவில்லை. இதனால் தனக்கு இந்தப்படம் ஒரு கம்பேக் படமாக தமிழுக்கு இருக்கும் என்கிற நம்பிக்கையில் வடிவேலுவுடன் இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.