அந்த வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன். முழு நீள காமெடி படமாக தயாராகி வரும் இப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கிறார்.
வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி ஹீரோ வீரா பேசும்போது, “இந்தப் படத்தில் ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்” என்றார்.
இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் கூறியதாவது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ‘ராஜதந்திரம்’ படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன் முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்கு தான் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’வின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது.
முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி” என்றார்.
மேலும் படத்தைப் பற்றி அவர் கூறும்போது, “இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது” என்றார்.