நேற்று சென்னையில் நடைபெற்ற அரிகொம்பன் படத்திம் பிரஸ்மீட்டில் தமிழ்குமரன் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது,
“இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு முக்கியக் காரணம் கருணாகராஜன் அண்ணன்தான். அவர் எனது தந்தைக்கும் நெருங்கிய நண்பர். அனைவரிடமும் மிகுந்த பாசத்துடனும் அன்புடனும் பழகக்கூடியவர். அதேபோல் அவரது அன்புத் தம்பி மிதுனும் அன்பாகப் பழகக்கூடியவர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
மேடையில் வீற்றிருக்கும் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, துணைத் தலைவர் கமலக்கண்ணன், தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்ரெட் குமார், எழில், பைஜா, தீனா, இசையமைப்பாளர், அஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலில் படத்தைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், திரைப்படம் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. டிரைலரையும் பாடல்களையும் பார்த்தேன். எழில் சாரின் படைப்பில் உருவாகியுள்ள காட்சிகளும், இசையமைப்பாளர் சேவியர் இசையும் சிறப்பாக அமைந்துள்ளன. காட்டுப் பகுதியில் யானையை மையமாக வைத்து உருவாக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. ‘கேப்டன் பிரபாகரன்’, ‘பேராண்மை’, ‘மைனா’, ‘கும்கி’ போன்ற திரைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில் ‘அரிக்கொம்பன்’ அமைந்துள்ளது. குறிப்பாக, கதாநாயகி லட்சுமி மேனனைப் போலவே இருக்கிறார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். குறிப்பாக, கருணாகராஜன் மற்றும் மிதுனுக்காக இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசும்போது, நானும் தலைவர் ஆர்.கே. செல்வமணியும் தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் ஆலோசித்து வருகிறோம். இதற்காக எங்களுக்கென தனிப்பட்ட நேரத்தையும் ஒதுக்கி உழைத்து வருகிறோம். எந்தவிதமான சம்பளமும் இல்லாமல், ஒரு சேவையாகவே இந்தப் பணிகளைச் செய்து வருகிறோம்.
தலைவர் செல்வமணி பொறுப்பேற்ற பிறகு, ஒரு வாரத்தில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்று கூறினார். எப்போதும் சங்கப் பணிகளிலேயே ஈடுபட்டிருப்பதால், இதே வேலையாக இருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்று ஒரு இசையமைப்பாளர் கேட்டதாகவும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு திரைத்துறையின் நிகழ்ச்சிகளிலும், சங்கப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
பெரிய திரைப்படங்கள் மட்டுமின்றி சிறிய திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் இடையே முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. தற்போது இரு அமைப்புகளும் ஒற்றுமையுடன் இணைந்து, தயாரிப்பாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. பல்வேறு நல்ல திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறோம்.
தமிழக அரசும் திரைத்துறையின் கோரிக்கைகளுக்குச் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரிடம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்குத் தேவையான ஆதரவு கிடைத்து வருகிறது. திரைப்படங்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. இதனால் தமிழ் சினிமாவுக்கு மேலும் நல்ல ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணியன் சிவா குறித்துப் பேசுகையில், அவர் சினிமாவுக்காகவே வாழ்பவர் என்று கூறலாம். எப்போதும் திரைப்படங்களைப் பற்றியும் சினிமாவின் வளர்ச்சியைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பார் என்று பாராட்டினார்.
இறுதியாக, ‘அரிக்கொம்பன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்தி, படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகள்” என்றார்.