குட்டியாக தவழுவது, மெல்ல எழுந்து நடக்க முயற்சிப்பது என அடிப்படையான விஷயங்களைத் தாண்டித்தான் யானை தனக்குரிய பெரும் பலத்தை பெறும். சினிமாவில் வாரிசு நடிகர்களின் நிலையும் இந்த வகையறா தான்.
தமிழ்சினிமாவில் இன்றைக்கும் வாரிசு நடிகர்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தாலும் விஜய், சூர்யா, கார்த்தி என ஒரு சிலர் மட்டும் தான் முன்னணி ஹீரோக்கள் இடத்தை பிடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் இன்றுவரை அந்த இடத்துக்காக போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
‘வேகம்’, ‘நினைவில் நின்றவள்’ என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்.வி. சேகரின் மகன் அஸ்வின் சேகர் மூன்றாவதாக நடித்து இந்த மாதம் திரைக்கு வர இருக்கும் படம் தான் ‘மணல் கயிறு 2’. முதல் இரண்டு படங்களில் கிடைத்ததை விட இந்தப்படத்தில் எஸ்க்ட்ராவாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பது தான் அஸ்வின் சேகருக்கு எதிர்பார்ப்பு.
காரணம், இது விசு இயக்கத்தில் 1982-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகம். சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனுக்காக இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி முதல் பாகத்தில் நடித்த விசுவுடன் தானும் நடித்திருக்கிறார் எஸ்.வி.சேகர். அஸ்வின் சேகருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்க இவர்களுடன் ஜெகன், சாம்ஸ், சுவாமிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பட விநியோகத்திலும் தயாரிப்பிலும் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ‘யாருடா மகேஷ்’ படத்தை இயக்கிய மதன்குமார் படத்தை இயக்கியிருக்கிறார். சென்சாரில் க்ளீன் யூ சர்ட்டிபிகேட் வாங்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் விட்டு பேசினார் நாயகன் அஸ்வின் சேகர்.
”என்னோட அப்பா ஒரு நடிகர்ங்கிறது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு மட்டும் தான். அதைத்தாண்டி நான் ஜெயிக்கணும்னா கடுமையா போராட வேண்டும். அதைத்தான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நான் ஹீரோவா நடிக்கிறேன்னு சொன்னதும் என்னைப் பார்த்தவங்க எல்லாரும் ”என்ன அஸ்வின் ரொம்ப குண்டா இருக்காப்ல”ன்னு தான் அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. இப்படி நெறைய பேர் இந்த ஒரே கருத்தை சொன்னதால சொன்னா நம்ப மாட்டீங்க இந்தப் படத்துல நடிக்கிறதுக்காக நான் 20 கிலோ வரைக்கும் எடையை குறைச்சி நடிச்சேன்.
நான் ஹீரோன்னு சொன்னா புதுமுகம் நடிக்க வருவாங்க. தெரிஞ்ச முகம் வருவாங்களான்னு தேடினப்பத்தான் பூர்ணாகிட்ட கேட்டுப்பார்த்தோம். நான் வளர்ந்து வர்ற ஹீரோங்கிறதையும் பார்க்காம இந்தப் படத்துல நடிக்க ஓ.கே சொன்னாங்க. அவங்களுக்கு இந்த நேரத்துல நன்றி தெரிவிச்சிக்கிறேன் என்றார் அஸ்வின் சேகர்.
”எப்படி என்னோட நாடகங்கள்ல சிரிப்பு எக்கச்சக்கமா இருக்குமோ அதே மாதிரி இந்தப்படம் ஒரு நகைச்சுவைப்படமா குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற மாதிரி இருக்கும்” என்றார் எஸ்.வி.சேகர்.
காமெடி வெயிட்டிங்!!