‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே. ரெட்டி வெளியிட்டார்.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தை என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் வெளியான ‘குரங்கு பொம்மை’ எனும் படத்திற்கு இசையமைத்த கன்னட திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளரான அஜனீஸ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘மாய கங்கா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், ‘பனாரஸ்’ படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், இயக்குநர் ஜெய தீர்த்தா, நடிகர் சுஜய் சாஸ்திரி, கதாநாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மோன்டோரியோ ஆகியோருடன், தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி.கே. ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.