‘பாட்ஷா’ படத்தை மீண்டும் ரீமேக் செய்யலாம் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நினைத்தபோது வேண்டவே வேண்டாம் என்று சொல்லியனுப்பி விட்டார் ரஜினி.
எந்த வகையிலும் அதன் மீதான மாஸ் இமேஜ் ரீமேக் செய்வதால் கெட்டு விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு தான். இப்போது அதே ‘பாட்ஷா’ படத்தை புதிய தொழில்நுட்பத்தில் மெருகேற்றி மீண்டும் ரீ- ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
படம் என்பதால் எந்த ஒரு மாறுதலுக்கும் ஒப்புக்கொள்ளாத ரஜினி தான் நடித்த ஹிட் படங்களின் பெயர்களை இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் சொல்லவில்லை. மாறாக யார் வந்து கேட்டாலும் சம்மதம் சொல்லியனுப்பி விடுகிறார்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ரஜினி படங்களின் டைட்டில்கள் இளம் ஹீரோக்களின் படங்களுக்கு வைக்கப்பட்டு ரிலீசாகியிருக்கிறது. அதில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷே மாப்பிள்ளை, படிக்காதவன், தங்கமகன் என நான்கைந்து டைட்டில்களை தனது படங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால் அப்படி ரஜினி நடித்த ஹிட் படங்களின் டைட்டிலோடு வந்த புதிய படங்கள் ஹிட்டாகிறதா? என்றால் அதுதான் இல்லை. மோசமான தோல்வியைத் தான் தழுவியிருக்கின்றன. இதனால் ரஜினி ரசிகர்களே ரஜினியின் ஹிட் படப்பெயர்களை இப்போதுள்ள இளம் ஹீரோக்கள் பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் ரஜினியின் ‘தர்மதுரை’ படத்தின் டைட்டிலோடு வெளியான விஜய் சேதுபதி நடித்த படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அப்படத்தின் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது.
‘தர்மதுரை’ படம் வெற்றிபெற்றதையடுத்து நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நிஜ தர்மதுரையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள்.
ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களையும் குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார் ரஜினி.
விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார். சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமூக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.
வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த சந்திப்பு குறித்துப் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி ‘முள்ளும் மலரும்’, ‘காளி’ தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன் என்றார் நெகிழ்ச்சியோடு.
வழக்கமான ரஜினி டைட்டில் வைத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறாத நிலையில் ‘தர்மதுரை’ படம் வெற்றிகரமாக ஓடியிருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் பெருத்த நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.
‘மகிழ்ச்சி’!