‘சசிகுமார் மாதிரியே மிரட்டியிருக்கான்’ : அமீரை அசர வைத்த சிஷ்யரின் படம்!

 

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்கிறார் ஒரு ஹைடெக் சாமியார்.

”சம்பாதிச்ச வரைக்கும் போதும் சார், இருக்கிறது ஒரு வாழ்க்கை. அதை சந்தோஷமா வாழ்ந்திட்டு முடிஞ்ச வரை மக்களோட வாழ்வியல்களை படங்களா கொடுத்திட்டுப் போயிடணும்” என்று சாமியார்களையே யோசிக்கிற வைக்கிற தத்துவ வார்த்தைகளை உதிர்க்கிறார் இயக்குநர் அமீர்.

ஆர்யாவை வைத்து ஜல்லிக்கட்டு பற்றிய சந்தனத்தேவன் படத்தை ஒரு புறம் இயக்கிக் கொண்டிருக்க, மறு புறம் தனது அமீர் ஃபிலீம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் அச்சமில்லை அச்சமில்லை படத்தை சைலண்ட்டாக தயாரித்து முடிக்கிற ஸ்டேஜுக்கு வந்து விட்டிருக்கிறார்.

அமீரிடம் உதவியாளராக பணிபுரிந்த முத்து கோபால் ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் இந்தப்படத்தை அமீர் தயாரிக்க முன் வந்ததே சுவாரஷ்யம்.

முத்து கோபால் ஒரு ரெகமெண்ட்டேஷன்ல என்கிட்ட உதவியாளரா சேர்ந்தான். ஒரு நாள் சார் நான் ஒரு படம் பண்ணியிருக்கேன். கிட்டத்தட்ட 70 சதவீதம் படத்தை முடிச்சிட்டேன். மீதி 30 சதவீதம் படத்தை முடிக்க காசில்லை. அதனால அதை நீங்க தான் முடிச்சிக் கொடுக்கணும், அது மட்டுமில்லாம நீங்க இந்தப் படத்துல ஒரு கேரக்டர்லேயும் நடிச்சுக் கொடுக்கணும்னு சொன்னான்.

இப்படித்தான் என்கிட்ட இருந்த சசிகுமார் தனியா படம் பண்ணப் போனான். ஆனால் அவன் சுப்ரமணியபுரம் படத்தோட கதையை முழுசாச் சொல்லி கருத்தெல்லாம் கேட்டான். அதுல எந்த திருத்தமும் சொல்ல முடியல. அதனால் போய் எடுடான்னு அனுப்பிட்டேன். ஆனால் முத்து கோபால் என்கிட்ட படம் பண்ணப் போறதா சொல்லவே இல்லை. என் படங்கள்ல வேலை செஞ்ச அத்தனை பேரையும் கூட்டிக்கிட்டுப் போய் படத்தை முடிச்சிட்டு வந்து தான் சொன்னான்.

சரி அவன் மேல இருக்கிற நம்பிக்கையில எடுத்த வரைக்கும் உள்ள காட்சிகளை போட்டுப் பார்த்தேன். கண்டிப்பா சார் சசிகுமார் மாதிரியே இந்தப் படத்துல முத்து கோபால் மெரட்டியிருக்கான்.

அமீரே மிரள்கிற அளவுக்கு அப்படியென்ன கதைக்களம்?

திருப்பூர், கோயம்புத்தூரைச் சுற்றி பல ஆண்டுகளாக பெரும் பிரச்சனையாக இருக்கும் சாயப்பட்டறைகள் செய்கிற அநியாயங்கள் தான் இந்தப்படத்தின் கதைக்கருவாம்.

இந்த சாயப்பட்டறை விஷயம் அவனை ரொம்பவே பாதிச்சிருக்கு. அதனால ஒரு பருந்துப் பார்வையில படத்தை இயக்கியிருக்கான். என்று சொன்ன அமீர் படப்பிடிப்பின் போது முத்து கோபாலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் அவரை வைத்தே விவரிக்கச் சொன்னார்.

சாயப்பட்டறைகள் செய்கிற அநியாயங்களை அவங்க இருக்கிற ஏரியாவுக்கே போய் படம் பிடிக்கிறதுன்னா அவ்ளோ சாதாரணமில்லை. ஆனா அதையும் தாண்டி படம் எடுத்தோம். பல நாட்கள் படப்பிடிப்பு நடக்க முடியாமலும் போயிருக்கு. இது எந்த மாதிரியான படம்? யாருக்கு ஆதரவான படம்னு கூட கேட்டு மிரட்டல் வந்துச்சு. அப்புறம் பெர்மிஷன் கெடைக்காம ஷூட்டிங் நின்ன கதையெல்லாம் உண்டு. என்ற இயக்குநர் முத்து கோபால் படத்தில் தனது குருநாதர் அமீரை ஒரு விவசாயியாக நடிக்க வைத்திருக்கிறார்.

இந்தக் கதைக்கு முத்து கோபால் வெறோரு டைட்டில் தான் வைத்திருந்தாராம். ஆனால் எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தவுடன் இந்தப் படத்துக்கு அச்சமில்லை அச்சமில்லை டைட்டில் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசனை சொன்னதோடு கையோடு பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமியிடம் தானே பேசி டைட்டிலையும் வாங்கி வைத்திருக்கிறார்.

கண்டிப்பாக இந்தப்படம் டெக்னிக்கலா இருக்காது. ஆனால் மக்களை யோசிக்க வைக்கிற ஒரு வாழ்வியல் படமா இருக்கும் என்று உறுதியாகச் சொன்னார் அமீர்.

உண்மைக்கு என்றைக்குமே வெற்றி நிச்சயம்!

achamillai achamillaiameerDirector Ameermuthu gopalsasikumar
Comments (0)
Add Comment