பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்கார வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் பூபதி பாண்டியன் பேசியதாவது, “எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப் படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின் வாங்கி விட்டார் போல தெரிகிறது. அதன் பின் தான் விமல் இந்தப் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது. என் டைரக்ஷனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறி விட்டார்கள். அந்த வகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம். ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின் போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம். ஆனால் பின்னர் தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக் கொண்டு இருந்தோம்.
இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமை தான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப் பின் இடம்பெற்றுள்ள சரண்யா – நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.
வரும் ஜன-12ல் பொங்கல் வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வருகிறது..