‘எங்கிட்ட மோதாதே’ : ரஜினியும், கமலும் சேர்ந்து ரசிக்க ஒரு படம்!

80 களில் கட்-அவுட் கலாச்சாரம் கொடிகட்டிப் பறந்த நேரம்.

குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் தென் தமிழகத்தில் ரஜினி – கமல் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் இருவரது ரசிகர்களும் மோதிக்கொள்ளும் போது அப்படி ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

அந்தப் பரபரப்பை நம் கண்முன்னே நிறுத்தும் விதமாக தயாராகியிருக்கும் படம் தான் ”எங்கிட்ட மோதாதே.”

பாண்டிராஜின் உதவியாளர் ராமு செல்லப்பா இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்ராஜ் ரஜினி ரசிகராகவும், மூடர் கூடம் ராஜாஜி கமல் ரசிகராகவும் நடித்திருக்கிறார்கள்.

அடிப்படையில் கட் -அவுட் பெயிண்டர்களான இருவருக்கும் ரஜினி- கமல் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் மோதலும் ஸ்டார்ட் ஆகி விடும். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருகிறது கமல் ரசிகரின் தங்கையாக வரும் சஞ்சிதா ஷெட்டி – நட்ராஜின் காதல். கூடவே ராஜாஜிக்கு ஜோடியாக பார்வதி நாயரும் உண்டு.

இப்படி அடிக்கடி மோதிக்கொள்ளும் இருவருக்கும் பொதுவாக அரசியல்வாதி ஒருவர் வில்லனாக எண்ட்ரி கொடுக்கும் போது அவருக்கு எதிராக இருவரும் ஒன்று சேர்வதே கதையின் விறுவிறுப்பான ஏரியாவாம்.

முன்னதாக இந்தப் படத்தின் கதையை இயக்குநரும், நடிகருமான சசிகுமாரிடம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராமு செல்லப்பா. கதையைக் கேட்டதும் இந்தக் கதைக்கு பொருத்தமான ஹீரோ நட்ராஜ் தான். அதனால் அவரையே நடிக்க வைய்ங்க என்று ஆலோசனை சொல்லி அனுப்பினாராம்.

நட்ராஜூம் கதையைக் கேட்ட மாத்திரத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். அதோடு இயல்பாகவே நான் ரஜினி ரசிகன் என்பதால் எனக்கு இந்தக் கதை பிடித்துப் போனது என்கிற நட்ராஜ் இந்தப் படத்தை ரஜினி – கமல் இருவருக்கும் ஒரே நேரத்தில் போட்டுக் காண்பிக்க முடிவு செய்திருக்கிறார்.

கமல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார், ரஜினி ‘2.0’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக போட்டுக் காண்பிப்போம் என்று காத்திருக்கிறது படக்குழு!

Comments (0)
Add Comment