இப்படத்தை இயக்கும் ராம்காந்த் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை. என்கிற போதிலும், எழுத்து -இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார்.
நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார்.இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் ‘தரமணி’ படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் எடிட்டிங்கைக் கையாண்டிருக்கிறார்.
இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் InfoPluto Media Works தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் Roof Studios படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடந்திருக்கின்றன.
சென்னை, நுங்கம்பாக்கம் பிரிவியூ திரையரங்கில் இந்தப்படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா எளிமையாக நடைபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், அருகிலேயே தனது அலுவலகத்தில் இருந்த கே.பாக்யராஜ் இந்த இளைஞர் பட்டாளத்தின் வித்தியாசமான முயற்சியைக் கேள்விப்பட்டு, எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் உடனடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
“ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு 3 முறை ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்…” என்கிற இயக்குநர் அருண்காந்த் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அனைவரும் கோயமுத்தூர்க்காரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.,
முற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட கோகோ மாக்கோவை விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ வாங்கித் திரையிட முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
பிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும். அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100ரூ திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குழுவினரைப் பாராட்டிப் பேசிய கே.பாக்யராஜ், “ஒவ்வொருவரும் படத்தை மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். எனது படங்களிலும் படப்பிடிப்புத்தளத்தில் தான் வசனம் எழுதுவேன் என்றாலும், கதை உருவான போதே வசனங்களை மனதில் ஓட்டிப்பார்த்துவிடுவேன். நானும் யாரையுமே தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன். நீங்களாவது திரை ஆக்கம் தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
இன்று யு-டியூப்பிலேயே சினிமா கற்றுக் கொள்ளலாம். இன்றைய பெரிய நாயகர்கள் சம்பளம் வாங்காமல், பங்குதாரர்களாக இணைந்தால் சுலபமாகப் படம் எடுத்து விடலாம். வணிக ரீதியில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், டிக்கெட் முன்பதிவு சம்பந்தமான இளைஞர்களின் இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.