‘சென்னை ராக்கர்ஸ்’ அணியின் லோகோ வெளியீடு – விளம்பர தூதரானார் ஹன்சிகா!

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார், நடிகை மிஷா கோசல் ஆகியோர் கலந்து கொண்டனர். கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.

நிகழ்ச்சில் முதலில் பேசிய பயிற்சியாளர் ஜெர்ரி, “சென்னை ராக்கர்ஸ் அணிக்குப் பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாகச் சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பைஜு, “கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையாடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்குக் கிடைத்திருப்பது பெருமையான விஷயம்” என்று பேசினார்.

“நான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன் முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது” என நடிகை மிஷா கோஷல் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் ஹேமச்சந்திரன் பேசுகையில், “விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன. பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள். வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன” என்றார்.

1968இல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய கோகுலம் குழும தலைவர் கோபாலன், “இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவைக் கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம். ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.

எங்கள் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள்” என்றார்.

CBLCelebrity Badminton LeagueGobalanGokulam Chennai RockersGokulam Chennai Rockers Team Logo Launch NewsHansikaJanani IyerMisha GhoshalRuben
Comments (0)
Add Comment