ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் ( Panorama Studios ) தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ ( KOODU ) – விரைவில் திரைக்கு வருகிறது!
குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் சூனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து தனது புதிய தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மனிதநேயம், கருணை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட நெகிழ்ச்சியான கதையைச் சொல்ல வருகிறது.
அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள ‘கூடு’ திரைப்படம், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த உணர்வுப்பூர்வமான சம்பவத்தை மையமாகக் கொண்டது. அரிய வகைப் பறவை ஒன்று மின்மாற்றிக்குள் (Electrical Transformer) தனது முட்டைகளை இட்டுக் கூடு கட்டுகிறது. அந்தக் கூட்டையும் அதிலுள்ள உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய சூழலில், கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஒரு வியக்கத்தக்க முடிவை எடுக்கின்றனர். அந்தப் பறவையின் முட்டைகள் பாதுகாப்பாகப் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரை, தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கத் தாங்களாகவே முன்வருகின்றனர்.