விவசாயிகளின் துயர் நீக்கும் நிகழ்வாக மாறிய ‘கிரகணம்’ இசை வெளியீட்டு விழா!

”பிச்சைக்காரன்”, ”இறைவி”, ”என்கிட்டே மோதாதே” உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், வென்பெர் எண்டர்டெய்ண்மென்ட் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார்.. மற்றும் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்த சுந்தர மூர்த்தி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், கே பிலிம்ஸ் நிறுவனர் சேரன் மற்றும் ராஜராஜன், நடிகர் ஆரி, ‘பட்டதாரி’ புகழ் அபி சரவணன், ‘அசத்தப்போவது யாரு’ இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்..

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா..? அதில் உயிர்நீத்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் சார்பாக ஒரு கணிசமான நிதி உதவி வழங்கப்பட்டது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அபிசரவணன் டில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த விவசாயிகளுடன் சில நாட்கள் கலந்து கொண்டு, அந்த நட்பின், உணர்வின் காரணமாக மரணமடைந்த இந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்திற்கு இந்த நிதி உதவி கிடைக்க இந்த ‘கிரகணம்’ படக்குழுவினர் மூலமாக வழிவகை செய்துள்ளார்.

விழாவில் பேசிய அபி சரவணனும், ஆரியும் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். பொதுவாகவே சமூக நிகழ்வுகளில் மக்கள் தரப்பில் இருந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் ஆரி. இந்த விழாவில் அவர் பேசும்போது, விவசாயிகளை காப்பாற்றுவதை விட விவசாயத்தை காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம். விவசாயத்தை காப்பாற்றினால், விவசாயிகள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். வரும் நாட்களில் தண்ணீரின் தேவை அதிகரித்து தண்ணீர் வியாபாரம் கொடிகட்டி பறக்கப்போகிறது. விவசாயிகளுக்கு நாம் உதவ வேண்டும் என்றால் தண்ணீரை இப்போதிருந்தே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்” என எச்சரிக்கை திரி கொளுத்தி விட்டு சென்றார் ஆரி.

ஆரியும் கிருஷ்ணாவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் கிருஷ்ணாவின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அங்கே இங்கே என டென்சனுடன் அலைந்த கிருஷ்ணாவால் ஆரியை விழாவுக்கு அழைக்க முடியவில்லை. இருந்தாலும் நண்பனுக்காகவும், விவசாயிகள் குடும்பங்களுக்கு இந்த விழாவில் நிதியுதவி வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டதாலும் தானே விரும்பி வந்ததாக கூற, கண்களாலேயே ஆரியிடம் மன்னிப்பு கேட்டார் கிருஷ்ணா.

ChandranGraghanamGraghanam Audio LaunchGraghanam Audio Launch NewsKrishnaNandini Rai
Comments (0)
Add Comment