இந்தப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விட்டு வந்திருக்கும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கன்னியாகுமரி மீனவ மக்களின் கண்ணீரை துடைக்க எல்லோரும் கரம் கோர்ப்போம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…
”நவம்பர் 30-ம் தேதி வீசிய ஒக்கி புயல் குமரி மாவட்டத்தில் பேரழிவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே, இன்னமும் அதற்கான சுவடுகள் இருக்கின்றன.
விழுந்த கம்பங்கள்; சேதமடைந்த சாலைகளைத் தாண்டி உறவுகளைத் தொலைத்து அழுவதற்கு கண்ணீர் கூட வற்றிப்போயுள்ள மீனவ மக்களின் கண்கண் ஒக்கி புயலின் சாட்சியாக உள்ளன.
ஒக்கி புயல் கன்னியாகுமரியில் ஆடிய கோரத் தாண்டவத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். உறவுகளை தொலைத்து விட்டு அவர்கள் எழுப்பிய கூக்குரல் என்னை அங்கே செல்ல உந்தியதால் கடந்த 10-ம் தேதி (டிசம்பர் 10) அங்கு சென்றேன். ஒரு நாள் பயணம் தான்.. கனத்த இதயத்துடன் திரும்பியிருக்கிறேன்.
கன்னியாகுமரிக்குச் சென்றேன். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பணம் மேற் கொண்டேன். ஊரெங்கும் ஒரே அழுகைச் சத்தம். “எங்களுக்கு நிவாரணம் எல்லாம் வேண்டாம்.. எங்கள் உறவினர்களை திரும்ப அழைத்து வந்தால் போதும்” என்ற புலம்பல் ஒருபுறம். “ஐயா… கடலில் உடல்கள் மிதக்கிறதா சொல்றாங்க.. அந்த உடல்களையாவது மீட்டுக் கொடுங்கள்” என்ற கண்ணீர் மறுபுறம்.
சிறு பிள்ளைகள்கூட பதாகை எந்தி போராட்டக்களத்தில் கண்ணீருடன் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கே நெஞ்ச்சை பிளப்பதாக இருந்தது.
“புதுசா புதுசா தொழில்நுட்பம் எல்லாம் வந்திருச்சுன்னு சொல்றாங்க… ஆனா, புயல் வர்ரதற்கு ஒரு நாளைக்கு முன்னால தான் சொல்றாங்க. கொஞ்சம் முன்னாலேயே சொல்லியிருந்தா கடலுக்கு அனுப்பியிருக்கமாட்டோமே” என்று கதறுகிறார் ஒரு பெண்மணி.
சென்னையில், டிசம்பர் 2015-ல் பெருமழை ஏற்பட்ட போதும் சரி, டிசம்பர் 2016-ல் வார்தா புயல் புரட்டிப்போட்ட போதும் சரி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் வந்து ஆதரவு தெரிவித்து களப்பணியாற்றியது ஆறுதல் அளித்தது.
ஒரு பிரச்சினையின்போது கரம் கொடுப்பவரே மனிதம் நிறைந்தவர். இப்போது நாம் அனைவரும் நம் மனிதக் கடமையாற்ற குமரி நோக்கிச் செல்ல வேண்டும். அங்கே கடலில் குதித்து தேடும் பணி நமக்கு சாத்தியில்லாமல் போகலாம்; ஆனால் அங்கே கண்ணீர் சிந்தும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.
வழிதெரியாமல் விழிகள் வறண்டு நிற்கும் நம் உறவுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யலாம். நிவாரணம் ஏதும் தேவையில்லை என அவர்கள் சொன்னாலும் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை இழந்து நிற்பவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாவது தேவை என்பதே நிதர்சனம். பொறுப்புள்ள இளைஞர்களாக நாம் கடமையாற்ற அங்கே களம் இருக்கிறது.
ஒரு வீட்டில் 4 பெண்கள், அந்த நான்கு பேருமே ஒக்கி புயலுக்கு தத்தம் கணவரை பறிகொடுத்துள்ளனர். இப்படி நூற்றுக்கணக்கான சகோதரிகள் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கதியாக நிற்கின்றனர். அரசாங்கம் அதன் வழியில் உதவட்டும்; நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம்.” இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.