தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : விஜய் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?

தேர்தல் என்று வந்து விட்டாலே தங்கள் அபிமான ஹீரோ யார் பக்கம் நிற்கப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் அவரது ரசிகர்கள்.

அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பிறகு அவர் வாய்ஸ் யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் வந்து விடுகிறது.

முந்தைய தேர்தல்களில் தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி ஆதரவு கொடுத்து வந்த விஜய் இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், விரும்பிய வேட்பாளர்களுக்கு ரசிகர்கள் ஓட்டு போடலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் நடுநிலையை வகிக்க முடிவு செய்துள்ளது. அதாவது எந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதே சமயம் விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ, பயன்படுத்தக்கூடாது. இந்த நிலைபாட்டை நான் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை நேரில் அழைத்தும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெளிவுபட கூறி இருக்கின்றேன். மேலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறேன்.

இந்நிலையில் சில ஊடகங்களில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்தது போல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே விஜய் ரசிகர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் தங்கள் விருப்பம்போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்கள் விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் இந்த நடுநிலைக்கு இரண்டு பெரும் கட்சிகளுக்கு ஏற்கனவே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தும் கூட திமுக ஆட்சியில் இருந்த போது காவலன் படத்துக்கு ஆளும் கட்சியின் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அடுத்த தேர்தலில் அதிமுக பக்கம் சாய்ந்தார் விஜய்.

ஆனால் அப்படி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தும் கூட அதிமுக ஆட்சியில் அவரது தலைவா படத்துக்கு ரிலீஸ் நேரத்தில் பெரும் சிக்கலை உண்டு பண்ணியது.

இப்படி இரண்டு கட்சிகளும் மாறி மாறி குடைச்சல் கொடுத்த காரணத்தினாலேயே இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகிப்பது என்கிற முடிவுக்கு வந்தாராம் விஜய்.

‘தெறி’ முடிவு!

2016 TN electionIlayathalapathivijayஇளைய தளபதிசட்டமன்ற தேர்தல் 2016விஜய்
Comments (0)
Add Comment