இருமுகன் ரசிகர்களுக்கு பிடித்த படமாகி விட்டது! : விக்ரம் பெரு மகிழ்ச்சி

 

‘ஐ’ படத்தில் செய்த மெனக்கிடலுக்கு எதிர்பார்த்ததை விட வெற்றியின் வரவேற்பு குறைந்து போனதில் விக்ரமுக்கு வருத்தம் தான். அதை விட அந்தப் படத்தின் உடல் உழைப்பைக் கொடுத்து நடித்ததற்கும் தேசிய விருதுப் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறாதது திரையுலகினர் மத்தியிலேயே வருத்தத்தை கொடுத்தது.

ஆனால் அத்தனை வருத்தங்களுக்கும் சேர்த்து பெரு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது சென்ற வாரம் ரிலீசான ‘இருமுகன்’ திரைப்படம்.

மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்து வரும் இருமுகனின் வெற்றி விக்ரமின் உழைப்புக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தை வாங்கி விநியோகம் செய்த ஆரா சினிமாஸ் நிறுவனத்துக்கு கூட உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு கலெக்‌ஷன் என்கிற விபரத்தை வெளிப்படையாக ஆரா சினிமாஸ் மகேஷ் மேடையில் சொல்ல ” கண்டிப்பா நான் கூட சரியான வசூல் விபரத்தை சொல்லியிருக்க மாட்டேன்” என்றார் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ்.

நிகழ்ச்சியில் பேசிய சீயான் விக்ரம் இது எனக்கு ஒரு கனவு போல இருக்கிறது என்றவர் தொடர்ந்து பேசும்போது :

ஒரு நடிகனுக்கு அவன் நடித்த கடைசிப்படம் முக்கியம். அதன் கதாபாத்திரம்தான் அவனுக்கு முகவரியாக இருக்கும். ‘இருமுகன் ‘ படத்தில் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை எனக்காக உருவாக்கி நடிக்க வைத்த இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு நன்றி.

அவரது சிறப்பான தனிக்குணம் எல்லாரையும் அவர்களின் போக்கில் செயல்பட விட்டு அவர்களிடமுள்ள சிறப்பான விஷயத்தை வெளிப்படுத்த வைப்பதுதான். அப்படி அவர் எல்லாருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். நித்யா மேனன் கூட இந்த வசனத்தை இப்படி பேசலாமா என்று எனக்கு போனில் கேட்பார். அந்த அளவுக்கு எல்லாரையும் தங்கள் சொந்தப் படம் போல நினைக்க வைத்தார். நான் இதில் நடித்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றின் சாயல் இன்னொன்றின் மீது படாதபடி ,ஒன்றின் நிழல் இன்னொன்றின் மீது விழாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. அவர் கொடுத்த சுதந்திரத்தில் தினசரி படப்பிடிப்புக்கு முழு பலத்துடன் போவேன்.

நடித்த இரண்டு பாத்திரங்களில் இரண்டில் எது முக்கியம்? எதை நடிக்கும் போது சிரமப்பட்டீர்கள்? என்று கேட்டார்கள் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.எனக்கு இரண்டுமே முக்கியம்தான். ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி . நன்றாகக் கதை சொன்னார்.அவர் கதை சொல்லும் போதே எங்கே ரசிகர்கள் சிரிப்பார்கள் எங்கே ரசிகர்கள் கை தட்டுவார்கள் என்பதை எல்லாம் திட்டமிட்டு செய்வார். இந்தப் படக்குழுவில் இருக்கும் போது மணிரத்னம். ஷங்கர் போன்ற பெரிய படக்குழுவில் இருப்பது போல உணர்ந்தேன். பெரிய பெரிய ஆட்களாகவே எல்லாருமே இருந்தார்கள். அப்படிப்பட்ட படக்குழுவுக்கு நன்றி. சுரேஷ் செல்வராஜ் போட்ட செட் பிரமாண்டமாக இருந்தது.மிரண்டு விட்டேன். எளிமையான பொருட்களைக் கொண்டே செய்து அசத்தியிருந்தார்.

பொதுவாக , படத்தில் நடிப்பவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருப்பார்கள்.ஆனால் எடிட்டிங்கில் குதறி விடுவார்கள். இதில் நான் நடித்த எல்லாக் காட்சிகளும் இருந்தன. விறுவிறுப்பாகவும் எடிட்டிங் செய்திருந்தார் புவன் சீனிவாஸ். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ‘பீமா’ வுக்குப் பிறகு நண்பராகி விட்டார். பிரச்சினையான காலகட்டத்தில் உதவியாக ஊக்கமாக இருப்பார். எனக்காக என் சௌகரியத்துக்காக லைட்டிங் எல்லாமே மாற்றினார்.

தயாரிப்பாளர் சிபு வுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. பத்து மாதமாக இந்தப்படம் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை இருந்தது. ஆனால் இரண்டே நாளில் முடிவு செய்து எல்லாவற்றையும் மாற்றினார்.இப்போதும் என்னால் நம்பமுடியவில்லை.எல்லாமே கனவு போல இருக்கிறது.

இந்தப் படத்துக்காக ஹரிஸ் ஜெயராஜ் பறந்து பறந்து வேலை பார்த்தார். ஒரு டீஸருக்கு, ட்ரெய்லருக்கு இவ்வளவு உழைப்பா? என வியந்தேன். ‘சாமுராய்’ முதல் நாங்கள் இணைந்து பயணிக்கிறோம்.அந்தப் படத்துக்குப் போட்ட ‘மூங்கில் காடுகளே’ பாட்டுதான் இன்றும் என் காலர் ட்யூன். பிறகு ‘அருள்’ ,’பீமா’ ,’அந்நியன்’ என்று இணைந்தோம். இப்போது ‘இருமுகன்’ மறக்க முடியாதது. அவருக்கும் நன்றி.” என்றார் விக்ரம்.

 

ChiyaanChiyaan VikramIrumuganIrumugan Success Meet NewsNayantharaVikram
Comments (0)
Add Comment