தெருவுல இறங்கி போராடினாத்தான் பதில் சொல்வீங்களா? : : மோடி மீது கவுதமி காட்டம்

மோடியை விமர்சிப்பவர்கள் எல்லோருக்கும் ‘தேசத்துரோகி’ என்கிற பட்டம் மத்தியில் ஆளுகிற பாஜக கட்சியினரால் தாராளமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

விமர்சிப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் மோடியிடம் கேள்வியை எழுப்புவர்களின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. அனேகமாக அப்படிப்பட்டவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நான் கேட்ட கேள்விக்கு பதில் என்னாச்சு? என்று மீண்டும் பிரதமர் மோடியின் மூக்கை நோக்கி கேள்வியை நீட்டியிருக்கிறார் நடிகை கவுதமி.

உடல் நலக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரித்து உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்குமாறு கடந்த டிசம்பர் 8-ம் தேதி மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் நடிகை கவுதமி.

ஆனால் அந்தக் கடிதத்துக்கு பிரதமர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இல்லை. கெளதமி அப்படி ஒரு கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பவே இல்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் குழப்பி வருகின்ற நிலையில் தனது கடிதத்துக்கு இத்தனை நாட்களாகியும் பிரதமர் பதில் தராதது ஏன்? என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் கவுதமி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் நிலவுவதைக் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் 8-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இது சமூக வலைத் தளங்களிலும் மீடியாவிலும் பலராலும் பகிரப்பட்டது.

சமூக வலைத்தளங்கள், மீடியாவைப் பாவிப்பதில் பிரதமர் மோடி மற்ற தலைவர்களை விட முன்னோடியாகத் திகழ்பவர். அப்படிப்பட்டவருக்கு நான் எழுதிய கடிதம் நேரடியாகவும், மீடியா வழியாகவும் தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இதுவரை தெரிவிக்கவில்லை.

பல லட்சம் மக்களுக்குத் தெரிந்த அந்தக் கடிதம், பிரதமரின் பார்வைக்கே போகவில்லை என்பது, குடிமக்களாகிய நம்மைச் சூறையாடுவதற்குச் சமம். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனது கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார்? தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் போய்ப் பார்த்தனர். ஆனால் ஒருவர் கூட அவரது உடல்நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை.

தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் மறுப்பதும், ஜெயலலிதாவுக்கு நீதி மறுப்பதும் தமிழக மக்களுக்கு மறுக்கப்படும் நீதியாகும். ஒருவரது கேள்விக்கு பதில் கிடைக்க தாமதமானால் பரவாயில்லை. ஆனால் பதிலே கிடைக்கவில்லை என்றால், அந்த குடிமகனுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்றுதானே அர்த்தம்?

அதுவும் பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவர் மரணம் குறித்த தகவல்களை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டுமல்லவா? இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமோ?” என்று காட்டமாக கேட்டுள்ளார்.

கவுதமியின் இந்த கேள்விக்கு பாஜக பிரஜைகளின் ‘அர்ச்சனைகள்’ டீசண்ட்டாக இருக்குமா? அல்லது படுமட்டமாக இருக்குமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

actress gautamiGautamiGautami Modi MeetJayalalithaa Death MysteryModiNarendra Modiprime minister modi
Comments (0)
Add Comment