மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் அந்தப் படத்தைப் பற்றிய சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் என்றால் கேட்க வேண்டுமா என்ன?
படப்பிடிப்புக்காக அவர் மலேசியா சென்றாலும் சென்றார் தினமும் அங்குள்ள ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் படத்துக்கு பப்ளிசிட்டி என்றாலும், இன்னொரு பக்கம் படத்தின் சீக்ரெட்டுகள் இப்படி வகை தொகையில்லாமல் கசிகிறதே என்கிற வருத்தமும் கபாலி டீமுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் படத்தின் ஸ்டில்களை பகிர வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
சரி புகைப்படங்களை விட்டு விடுங்கள். இப்போது புதிதாத இதுதான் கபாலி படத்தின் கதை என்று ஒன்று உலாவிக் கொண்டிருக்கிறது இணையதளத்தில்…
ஒரு கதையல்ல, இரண்டு கதைகள் படித்துப் பாருங்கள்…
கதை ஒன்று :
மிகப்பெரிய தாதாவாக இருந்த ரஜினிகாந்த் அதையெல்லாம் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மலேசியாவுக்குச் சென்றிருந்த போது அவருடைய மகள் தன்ஷிகாவை யாரோ கடத்தி விடுகிறார்களாம். மகள் கடத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும், மீண்டும் தன் தாதா வாழ்க்கைக்குத் திரும்பி மகளை ரஜினிகாந்த் எப்படி மீட்கிறார் என்பது தான் படத்தின் கதை என்கிறது முதல் கதை.
அடுத்து இரண்டாவது கதை :
தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக மலேசியா செல்லும் அப்பாவிகளை அங்குள்ள சிலரும், இங்குள்ள ஏஜெண்டுகள் சிலரும் அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஊருக்கு நியாயம் செய்யும் தாதா கபாலியிடம் முறையீடு வர மலேசியா சென்று அவர்களை மீட்கிறார் கபாலி.
சில காரணங்களால் தாதா வாழ்க்கையை விட்டுவிட்டு அமைதியாக வாழ்கிறார் கபாலி. ஆனால் கபாலியின் மகளை நிழலுலக தாதாக்கள் கடத்த, மகளை மீட்கவும், தீயவர்களை ஒழிக்கவும் அதிரடி ஆக்ஷன் மீண்டும் இறங்குகிறார் கபாலி! அதில் கபாலி வென்றாரா? இல்லையா? என்பதே கதையாம்!
ராதிகா ஆப்தே தான் படத்தின் கதாநாயகி ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் டூயட்டே இல்லையாம்.
மலேசியாவைத் தொடர்ந்து தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் சென்னை மற்றும் கோவாவிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
கபாலியின் ஒரிஜினல் கதை எப்படி இருக்குமோ தெரியவில்லை. இதுதான் கபாலியின் கதை என்று கெளப்பி விடுபவர்கள் உண்மையிலேயே சுவாரஷ்யமாகத்தான் கெளப்பி விடுகிறார்கள்.