கேரக்டருக்காக மெனக்கிடுகிற, அதுவாகவே தன்னை மாற்றிக் கொள்கிற ஒரு சில ஹீரோக்களில் ஆர்யாவும் ஒருவர். பாலாவின் ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’ படங்களே அதற்கு அத்தாட்சியாக வந்து நிற்கும்.
அந்தளவுக்கு தான் ஏற்று நடிக்கிற கதாபாத்திரத்துக்கு தன்னால் முடிந்தளவுக்கு உயிர் கொடுக்கிறவர் அப்படி ஒரு மெனக்கிடலைச் செய்திருக்கும் புதிய படம் தான் ‘கடம்பன்’.
ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்குமிடையே உள்ள பாசப்பிணைப்பை யதார்த்தமாகச் சொன்ன ‘மஞ்சப்பை’ வெற்றிப்படத்தின் இயக்குநர் ராகவா தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி செளத்ரி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி கோதுமை நிறத்தழகி கேத்ரீன் தெரசா.
காட்டின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள். அப்படிப்பட்ட காட்டை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விரிவாக சொல்லும் படம் தான் இந்தக் கடம்பனாம்.
”தாய்லாந்துல தான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங். அதுவும் 50 யானைகளை ஓட விட்டு அதற்கு நடுவுல ஆர்யா சண்டை போடணும். ‘யானைகளுக்கு நடுவே சண்டை’னு ஈஸியா கதை எழுதிட்டேன். ஆனா நேர்ல 50 யானைகளைப் பார்த்ததும் கை கால்கள் உதறிடுச்சு. எனக்கே இப்படின்னா, எந்த டூப்பும் இல்லாம, சண்டை போட்ட ஆர்யாவோட நிலையை யோசிச்சிப்பாருங்க? உண்மையிலேயே அவரோட உழைப்பு இந்தப் படத்துல ரொம்பவே இருந்துச்சு” என்கிறார் இயக்குநர் ராகவா.
படத்தைப் பற்றி பேசிய ஆர்யா… “கடம்பன் கதையை எனக்கு முன்னாடி செளத்ரி சார் தான் கேட்டார். அதன் பிறகுதான் இந்த கதையை எனக்கு அனுப்பி வைத்தார். நான் ஒப்புக் கொண்டதும் படத்தை பற்றி அவர் எதுமே கேட்கவில்லை. எனக்கு படம் நல்லா வர வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எல்லாருமே இந்த படத்தில் ஜெயிக்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த ஊக்கம் தான் எங்களை இந்தளவுக்கு ஓட வைத்திருக்கிறது.
இந்த படத்திற்காக 50 யானைகளை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராகவா. ஒவ்வொரு யானைக்குமே ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 12 நாட்கள் அந்த யானைகளை வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். ஹீரோயின் கேத்ரின் தெரசாவிடம் ஜித்தன் ரமேஷ் என்னை பேச கூட விடவில்லை. அந்தளவிற்கு படம் படு பிசியா ஷூட்டிங் நடைபெற்றது.
அது மட்டும் இல்லாமல் இதில் பணியாற்றிய ஒவ்வொரு டெக்னிசினியனும் ரொம்ப கஷ்டப்பட்டனர். சொல்ல போனா இப்படத்தின் கேமராமேன் ஒரு ஷாட்டுக்காக 20 யானைக்கு மத்தியில் கேமரா எடுத்து விட்டு ஷாட் எடுக்க ஒடும் போது அதும் சகதி தவறி கீழே விழுந்து விட்டார். பின்னாடி வந்த யானை அவரை பார்த்து விட்டு நின்றது கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.
அதன் பின்பு ஆர்ட் டைரக்டர் அவர் போட்ட செட்டுக்கு பணம் குறைவாக கொடுத்ததால் செட் கொஞ்சம் கடகடவேன ஆடியது. அந்த செட் 100 அடி நீளம் அதுலே நான் மட்டுமில்லாம மொத்தம் 20 டெக்னிசியன் இருந்தனர். நான் பயந்து விட்டேன் என்னை பற்றியல்ல என்னுடன் இருந்த அந்த 20 டெக்னிசியன் பற்றித் தான் . அந்தளவுக்கு இந்தப் படத்துக்காக எல்லோரும் ரொம்ப ரிஸ்க் எடுத்து வேலை செய்தோம்” என்ற ஆர்யா ஹீரோயின் கேத்ரீன் தெரசாவின் டெடிகேஷனைப் பற்றியும் பெருமிதத்தோடு சொன்னார்…
”காட்டுக்குள்ள ஷூட்டிங் எடுத்த போது அங்க கரண்ட் கிடையாது, ஒரு ஃபேன் கூட கெடையாது, தங்குறதுக்கு நல்ல ஹோட்டல் கிடையாது, சின்னச் சின்ன வசதிகளுக்குக் கூட கொஞ்சம் சிரமமாத்தான் இருந்துச்சு. அப்படியிருந்தும் அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம நல்லபடியா நடிச்சுக் கொடுத்தாங்க கேத்ரீன் தெரசா ” என்றார் ஆர்யா.
வருகிற ஏப்ரல் 14-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது ‘கடம்பன்.’