’12 தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்திய விஷால்…!’ : ஆதாரத்தை வெளியிட்டார் கலைப்புலி தாணு!

மிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கேயார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் டி. சிவா போட்டியிலிருந்து விலகி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி ஜி. சேகரன் போட்டியிலிருந்து விலகி, நேற்று ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். இதன் மூலம் முன்னேற்ற அணியின் பலம் அதிகரித்தது அந்த உற்சாகத்தோடு பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னேற்ற அணியினர் விஷாலை கடுமையாகச் சாடினார்கள்.

குறிப்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விஷால் தமிழ்சினிமாவின் ஒரு தீய சக்தி என்று சாடினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது : “நான் இன்று இங்கே தொழிலில் நிற்கக் காரணம் கலைப்புலி ஜி.சேகரன் தான். இங்கே அசகாய சக்தியாக அவர் வந்திருக்கிறார். அவர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

அன்று 5, மீரான் சாஹிப் தெருவிலிருந்து தொடங்கிய எங்களின் நட்பு பழமையானது. ஆழமானது. அப்போதெல்லாம் அவர் எவ்வளவோ கதைகள் கூறுவார் ‘பொல்லாத ஊரு’ என்றொரு கதை. இன்று எடுத்தாலும் ஓடும். விஷால் இதில் நடிக்கலாம் ஒரு வெற்றிப் படமாவது கிடைக்கும். விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடட்டார்கள். 12 படங்கள் தோல்வியடைந்துள்ளன.

உதாரணத்துக்கு ‘சமர்’ படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள் என்றவர் அங்கேயே தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் முன் பேச விட்டார். ரமேஷ் நாயுடு பேசும்போது ” நான் ‘சமர்’ படத்தின் தயாரிப்பளர் பேசுகிறேன். அன்று ‘சமர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் படமாகிக் கொண்டிருந்தது.
நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் இருக்கிறார்கள். கனல் கண்ணன் தான் ஸ்டண்ட் மாஸ்டர்.

கடைசி நாள். பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின் போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன். ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், இருக்க மாட்டேன் நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இத்தனைக்கும் அவருக்கு நான் சம்பளம் முழுதும் கொடுத்து விட்டேன். கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள்.

நான் படப்பிடிப்புக்கு வரக்கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது.” என்றார் குமுறலுடன்)

பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது, ”பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை?

விஷால் இது என்ன கேலிக் கூத்து? அப்படி எதற்கு உனக்கு இந்த பதவி வெறி..? ஏன் இந்த நாற்காலி வெறி..? நீ ஒரு அழிவு சக்தி?

தேர்தலில் இன்னொரு அணியில் நிற்கும் கேயார் சங்கப் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்தவர். 1. 35 கோடிரூபாய், அந்த டிரஸ்ட் பணத்தைத் தராமல் இருந்தவர். போராடித்தான் வாங்கினோம். இது அவர் கூட இருக்கும் எஸ்.ஏ.சிக்கும் தெரியும்.

விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால்?

தயாரிப்பாளர் என்றால் உனக்குக் கிள்ளுக்கீரையா?

தயாரிப்பாளர்களை நாடக நடிகர்கள் என்று நினைத்தாயா? நாசர் நல்லவர். அவர் புனித ஸ்தலம் போன்றவர். குறை சொல்ல இடமில்லாதவர். உன்னுடன் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் போட்டோ ஆதாரத்துடன் 1 ஆம் தேதி வெளியிடுவேன். ராதாகிருஷ்ணன் தயாரிப்பாளர்களின் நலம் காப்பவர். சிறுபடத் தயாரிப்பாளர்ளுக்காகப் போராடுபவர். அவர் அணி வெற்றி பெறும். அதற்காக நாங்கள் துணை நிற்போம்,” இவ்வாறு பேசினார்.

Kalaippuli S Thanuproducers councilproducers council electionvishal
Comments (0)
Add Comment