வாணி, சரிகா என இரண்டு நடிகைகளை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த ”உலக நாயகன்” கமல்ஹாசன் இருவரையும் அடுத்தடுத்து விவாகரத்து செய்து விட்டு தனியாக இருந்தார்.
அந்த இடைவெளியில் கெளதமியுடன் நட்பு ஏற்பட இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் சுமார் 13 ஆண்டுகளாக ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்தார்கள்.
சும்மாவே இருந்த கெளதமிக்கு தனது ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ ‘பாபநாசம்’ ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரியும் வாய்ப்பைக் கொடுத்தார். லேட்டஸ்ட்டாக ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பில் அப்படத்தில் நடிக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும், கெளதமிக்கும் காஸ்ட்யூம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின.
அந்த விஷயத்தில் கெளதமி சைலண்ட்டாக இருக்க, ஸ்ருதிஹாசனோ அதை மறுத்து அறிக்கை கூட வெளியிட்டார். இந்த விவகாரத்தால் கமல் – கெளதமி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூட செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் ”நானும் கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறோம், இது என் மகளின் நலனுக்காக எடுத்த முடிவு” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகை கெளதமி.
இது குறித்து நடிகை கெளதமி கூறியிருப்பதாவது :
“நானும், கமல்ஹாசனும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே.
மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்து விட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கிற்று. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இத்தருணத்தில் நான் யார் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை. அதேவேளையில் எவ்வித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவு.
ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவு.
திரைத் துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய விசிறி நான். இப்போதும் கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்ச்கிறேன். அவர் சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன்.
இந்த வேளையில் என்னுடைய அதி முக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கின்றன” இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கெளதமி.