கண்ட கண்ட மாடுகளும் மணியடிக்கக் கூடாது! : இந்து மக்கள் கட்சியை வெளுத்து வாங்கிய கமல்

மலுக்கு பப்ளிசிட்டி தேவையில்லை. ஆனால் சினிமாக்காரர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்த்துப் போராடி பப்ளிசிட்டி தேடுவதென்பது சில சில்லறைக் கட்சிகளுக்கு வாடிக்கையாகி விட்டது.

அதிலும் சமீபகாலமாக தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்கிற ரேஞ்சிலேயே இருக்கிற இந்த மாதிரியான சிறுவண்டு கட்சிகளின் நடவடிக்கைகள்!

மக்கள் போராட்டத்தில் எப்போதுமே பங்கெடுக்காத இதுபோன்ற கட்சிகள் திரையுலக பிரபலங்கள் என்ன செய்தாலும் உடனே எதிர்ப்புக் கொடி பிடிக்கிறார்கள்.

நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தில் வரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென்றும், அதை நடத்துகிற நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டுமென்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அவ்வளவு தான் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கொதிநிலைக்கு போய் விட்டார் கமல்?

நேற்று மாலையே அவசர பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். சந்திப்பில் பேசிய கமல் தன்னை கைது செய்யச் சொன்ன இந்து மக்கள் கட்சியை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்…

”என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆராய்ச்சி மணியைக் கன்றை ஈன்ற அல்லது இழந்த மாடு தான் அடிக்க வேண்டும். அதுதான் நீதி, அதை விட்டு விட்டு கண்ட மாடுகளும் மணி அடிக்கக் கூடாது என்று தன் மீது புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சியைச் சாடியவர் தொடர்ந்து…

எனக்கு எல்லாத் தரப்பு ரசிகர்களும் தேவை. கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை. நான் எதைச் செய்தாலும் விருப்பமுடன் தான் செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி ஏற்றுக்கொண்டேன். எதிர்மறை விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக் கொள்கிறேன்.

சைவம் என்பதற்கு வேறு பொருள் இருந்தாலும் இங்கு மதத்தோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. தமிழில் மட்டுமே சைவத்திற்கு மதத்தினோடு தொடர்புடைய விளக்கம் சொல்லப்படுகிறது. பிற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தசாவதாரம் வெளியான போது என்னைக் கொண்டாடினார்கள், அதுவே விஸ்வரூபம் படம் வெளியான போது எதிர்த்தார்கள். எந்த அரசாக இருந்தாலும் நான் எதிர்த்துப் பேசுவேன். அரசியல் குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. 37 ஆண்டுகளாக நற்பணி மன்றம் மூலமாக பல நன்மைகளைச் செய்துள்ளேன். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று முதலில் கூறியது நான் தான்.

”ஐன கன மன” பெங்காலி பாட்டு அதை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஏனென்றால் அது அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. எனவே அதைக் கற்றுக் கொடுத்தேன், அதில் தவறில்லை.

மக்களுக்காக நான் என்றும் பேசுவேன். சினிமாவை நசுக்கும் எந்த வரியையும் விதிக்காதீர்கள். சாதி என்று பேசுகிறார்களே அதை முதலில் உங்களால் நீக்க முடியவில்லை. தமிழகத்தில் மட்டுமே சைவம் மதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அரசின் செயல்பாடு குறித்து மதிப்பெண் போடுவது என் வேலை இல்லை. ஓட்டு மட்டுமே போடுவேன், தமிழக அரசியலில் எனது பங்கும் இருக்கிறது. அரசியலுக்கு நான் வரவேண்டிய அவசியமில்லை, நல்ல தலைவர் யாராவது வந்தால் போதும்” என்றார்.

Bigg Bossbigg boss tamilhindu makkal katchiKamal Haasankamal haasan press meet
Comments (0)
Add Comment