அறிமுக இயக்குனர் ரஜாத் இயக்கியிருக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லஷ்மண் தயாரித்திருக்கிறார்.
பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வர இருக்கும் இப்படத்தைப் பற்றி ஹீரோ கார்த்தி பேசியதாவது, ”தயாரிப்பாளர் லக்ஷ்மனணும், நானும் சின்ன வயசிலிருந்தே நல்ல நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத் தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான “மதுர வீரனை” தயாரித்தவர். லக்ஷ்மண் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.
இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும். ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.
ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்” என்றார்.