‘புலி’யோடு மோதியிருக்க வேண்டிய கத்துக்குட்டி சில நாட்கள் தாமதமாக கடந்த 9-ம் தேதி வெளி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஒரு நல்ல படம் எப்போது வந்தாலும் அதற்கு விமர்சகர்கள் மத்தியிலும், நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்கள் மத்தியிலும் கண்டிப்பாக கவனிக்கப்படும் என்பதை படத்துக்கு தியேட்டர்கள் அதிகரித்திருப்பதையே உதாரணமாகச் சொல்லலாம்.
பத்திரிகையாளர் இரா. சரவணன் இயக்கிய இந்தப் படத்தில் ‘மீத்தேன்’ என்கிற சீரியஸான விஷயத்தை பக்கா கமர்ஷியல் சமாச்சாரங்களோடு கொடுத்திருக்கிறார். அதுவே இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் அதன் பின்னணியில் காமெடி நடிகர் சூரி செய்த உதவி மிகப்பெரியது.
இந்தப்படத்தோட டைரக்டர் சரவணன் சார் முன்னப்பின்ன எனக்கு அறிமுகமானதில்லை. இவர் இதுக்கு முன்னாடி நாலைஞ்சு படங்களை இயக்கியதும் இல்லை. கதையைக் கேட்ட உடனே அண்ணே… நான் உங்களை நம்பி நடிக்கிறேன்னு சொல்லி முதல்ல ஒரு 12 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். அப்புறம் ஒரு வாரம் கழிச்சி இன்னும் கொஞ்ச நாள் வேணும்பார். நடித்துக்கொடுத்தேன். அடுத்து ரெண்டு மூணு நாள் கழிச்சி மறுபடியும் கால்ஷுட் கொடுத்தேன். பிறகு நானே அண்ணே ஓ.கே சூரி உங்க போர்ஷன் முடிஞ்சுப் போச்சுன்னு எப்போ சொல்றீங்களோ அப்போ என்கிட்ட சொல்லிடுங்க. அதுவரைக்கும் நான் நடிச்சுக் கொடுக்கிறேன்னு சொன்னேன்.
இன்னைக்கு இந்தப்படம் தியேட்டர் ஓனர்கள், ரசிகர்கள், ஊடகங்கள்ன்னு எல்லோரும் பாராட்டுறாங்க. அதைக் கேட்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம ஒரு நல்ல படத்துல தான் நடிச்சிருக்கேன்னு திருப்தியா இருக்கு. நான் என்னைக்குமே புதுமுக இயக்குநர்கள் படத்துல நடிக்க ரெடியாத்தான் இருக்கேன். என்னோட வெண்ணிலா கபடிக்குழு, களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு எல்லா இயக்குநர்களும் புதுமுகங்கள் தான்.
என்று சொன்ன சூரிக்கு ஒரே ஒரு ஆதங்கம் தான்.
சேலத்துல இருந்து கூட ஒரு தியேட்டர்ல கூட அந்த மாவட்ட கலெக்டர் குடும்பத்தோட படத்தைப் பார்த்துட்டு பாராட்டியிருக்கார். இப்படி எல்லாரும் பாராட்டுறாங்க. ஆனால் அது என்னன்னே தெரியல இந்த கத்துக்குட்டி படத்தைப் பத்தி இதுவரைக்கும் நம்ம சினிமா உலகத்துல யாருமே போன் போட்டுக்கூட என்கிட்ட பேசல. எந்தக் கருத்தும் சொல்லல. அது ஏன்?னு எனக்கும் புரியல. என்றார்.
பின்னர் பேசிய இயக்குநர் இரா. சரவணன் ஒரு படம் இயக்குகிறோம். அது கமர்ஷியல் படமாக மட்டும் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தான் என் மக்களையும் மண்ணையும் பாதிக்கக் கூடிய மீத்தேன் பாதிப்புகளை படத்தில் காட்டினேன். இன்றைக்கு தஞ்சை, மதுரை போன்ற ஊர்களில் இந்தக் கத்துக்குட்டியை அத்தனை விவசாயிகளும் போய் குடும்பம் குடும்பமாக பார்க்கிறார்கள்.
இந்தப்படத்தை பார்த்த சென்சார் அமைப்பினர் நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு மீத்தேன் எரிவாயு திட்டம் தேவையான ஒன்று. அப்படிப்பட்ட திட்டம் சரியானது இல்லை என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கான ஆதாரங்களை நான் படத்தில் அழகாக காட்சிப்படுத்தியிருந்தேன். இன்றைக்கு நாங்கள் படத்தில் சுட்டிக்காட்டிய மூன்று முக்கிய பாதிப்புகளை தான் தமிழக அரசின் வல்லுனர் குழுவும் சுட்டிக்காட்டி அரசு அந்தத் திட்டத்தை தடை செய்திருக்கிறது. இதுவே எங்கள் படத்துக்கு கிடைத்த வெற்றி தான். அந்த திட்டம் நிறுத்தப்பட்டதில் நாங்களும் ஒரு காரணியாக இருந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது எங்கள் எண்ணம் நிறைவேறியிருப்பதாக சந்தோஷப்படுகிறோம் என்றார்.
சரி மீத்தேன்னா என்னன்னு கேட்கிறவங்க ஒரு எட்டு பக்கத்து தியேட்டர்ல ஓடுகிற ‘கத்துக்குட்டி’யை பாருங்களேன்..!