‘தனி ஒருவன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதுப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்.
டைட்டில் வைக்கப்படாமலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படத்துக்கு சில டைட்டில்களை குறிப்பிட்டு அதில் சரியான டைட்டிலை யூகித்துச் சொல்லும் படி ரசிகர்கர்களிடம் கேட்டிருந்தார் இயக்குநர் கே.வி.ஆனந்த். ரசிகர்கள் ஆர்வத்தோடு தங்களது யூகங்களை சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஏஜிஎஸ் நிறுவனமும், இயக்குநர் கே.வி. ஆனந்தும் படத்துக்குகவண்’ என்கிற வித்தியாசமான டைட்டிலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி கவண் என்று கருதப்படுகிறது.
இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று
இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்கு தமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.
மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. பெரும் பொருட்செலவில் மிக பிரமாண்டமான செட்கள் அமைத்து, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக பங்கேற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரு. டி. ராஜேந்தர், வெள்ளித்திரையில் தனக்கே உரிய
பிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார். மடோனா செபாஸ்டின், விக்ராந்த், பாண்டிய ராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் ஆகியோரும் முக்கிய
கதாபாத்திரங்களில் பங்களிக்கின்றனர்.
கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. இளமை ததும்பும் ஐந்து பாடல்களை வழங்குகிறார் ஹிப் ஹாப் தமிழா. அதிலும் குறிப்பாக
டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புது வருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும்.
கே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள். தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து, நிறைவடையும் கட்டத்துக்கு வந்திருக்கிறது. நவம்பரில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது ஏ.ஜி.எஸ்.நிறுவனம்.