வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதே பெரிய விஷயம். அதனால் தேடி வருகிற எல்லா வாய்ப்புகளையும் மணி மைண்ட்டில் வளைத்துப் போட்டுக் கொண்டு நடிப்பார்கள். அப்படி நடிப்பவர்கள் அரை ரஜன் படங்கள் கூட தேறாமல் காணாமல் போய் விடுவார்கள்.
ஆனால் விதார்த் மாதிரியான வளர்ந்து வரும் இளம் ஹீரோ கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகப் பார்த்து நடிப்பது இன்றுவரை திரையுலகில் அவர்கள் நிலைத்து நிற்பதற்கான ஃபார்முலாவாகியிருக்கிறது.
மைனா, ஆள், குற்றமே தண்டனை என தேர்ந்தெடுத்து நடிக்கின்ற படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பயும், நல்ல பெயரையும் விதார்த்துக்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன.
அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கும் படம் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் விதார்த் இணைந்து நடித்திருக்கும் குரங்கு பொம்மை.
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரித்திருக்கும் இப்படத்தை நித்திலன் இயக்கியிருக்கிறார் அஜனீஷ் லோக்நாத் இசையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா ”பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. வருவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம் வரமாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன்.
இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்த தளிரை பாராட்டவே வந்தேன். நித்திலன் பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்த படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவார். என் வாழ்த்துகள்.
விதார்த், மிக வீரியமான நடிகன், பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான். அவனுக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.
இமயமே தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டியதைப் பார்த்த விதார்த் நெகிழ்ந்து போய் அவருக்கு மேடையில் மறக்காமல் நன்றி தெரிவித்தார்.