‘காக்கா முட்டை’ என்ற பெயரைக் கேட்டவுடன் முதலில் அந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டன் பெயர் தான்.
அந்தளவுக்கு யதார்த்த சினிமாவின் மொத்த உருவமாக காட்சி தரும் அவரின் எண்ணத்தில் இதோ இன்னொரு யதார்த்தம் தயாராகி விட்டது.
படத்தின் பெயர் ”குற்றமே தண்டனை”.
விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி திரைக்கு வரப்போகிறது.
”காக்கா முட்டை” படம் ரிலீசாவதற்கு முன்பே இந்தப் படத்தை ஆரம்பித்து விட்ட மணிகண்டனின் சிந்தனை தமிழ்நாட்டில் நடந்த ஒரு பரபரப்பான கொலைச் சம்பவத்தோடு தொடர்பு கொண்டிருப்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு.
மணிகண்டனின் படங்களில் சமூக அக்கறை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அந்த லெவல் இந்தப் படத்திலும் உண்டு. குறிப்பாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக ஏவப்பட்டு வரும் அதீத வன்முறையை இந்தப்படத்தில் திரைக்கதையாக்கியிருக்கிறார் மணிகண்டன்.
வேலைக்குப் போகும் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒருவன், பின்பு அவளை கொலை செய்வதாக அடுத்தடுத்த காட்சிகளில் நகருமாம் திரைக்கதை. கடைசியில் அந்த கொலையை செய்தது அவனா? வேறொரு ஆளா? என்பது தான் ‘குற்றமே தண்டனை’ படத்தில் ரசிகர்களை சீட்டு நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ்.
இந்த லைனைக் கேட்டவுடன் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் கொலையும் இப்படித்தானே நடந்தது என்று யோசிக்கிறீர்களா?
கரெக்ட், எப்போதோ ஆரம்பிக்கப்பட்டு எப்போதோ படப்பிடிப்பும் முடிக்கப்பட்ட இப்படத்தின் கதையும், சுவாதியின் கொலையும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பது தான் திரைக்கதையின் கூடுதல் சுவாரஷ்யம்!
சில சம்பவங்கள் சில திரைக்கதையோடு ஒன்றிப்போவது அபூர்வம். அப்படி ஒரு ஆச்சரியம் தான் ‘குற்றமே தண்டனை’ படத்திலும் நிகழ்ந்திருக்கிறது போலும்.
படம் வரட்டும்! அதையும் பார்த்து விடுவோம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!