“லேபிள்” எனக்கு அடையாளம் தரும்-நடிகர் அரிஷ் குமார் நம்பிக்கை!

‘லேபிள்’ வெப் சீரிஸ் குறித்தும் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்கள் குறித்தும் சுவாரசியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அரிஷ் குமார்.

“எத்தனையோ ரீமேக் படங்கள் வந்து போகின்றன. எல்லாமே தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் ஹிந்தி ரீமேக்காக வெளியானாலும் கூட அதில் நம் சமூக நீதிக்கான விஷயங்களை அழுத்தமாக பேசி இருந்தார் அருண்ராஜா.

அவரது எழுத்துக்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த படம் பார்த்துவிட்டு உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.அப்படியே அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பும் எனது ஆசையையும் வெளிப்படுத்தினேன். பெரும்பாலும் நான் இதுபோன்று நட்பை பயன்படுத்தி வாய்ப்புகள் தேட விரும்புவதில்லை.

ஆனால் சிலரது படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே ஏற்படும் தானே..??! அப்படித்தான் அருண்ராஜா காமராஜிடம் எனது விருப்பத்தைக் கூறினேன். அவரும் அதை மறவாமல் மனதில் வைத்து, தான் இயக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை எனக்கு கொடுத்தார்.

வெப் சீரிஸ் என்கிறபோது அதில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வெப் சீரிஸில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘லேபிள்’ என்றால் ஒரு அடையாளம்.. ஒரு பிராண்ட்.. அந்த வகையில் இந்த லேபிள் மூலம் நான் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன்.

இதுவரை வெளிவந்த வெப் சீரிஸ்களில் இருந்து சற்று வித்தியாசமாக அதே சமயம் ஹை குவாலிட்டி ஆக இது உருவாகி உள்ளது. இதை வெப் சீரிஸ் என்று சொன்னாலும் இதை ஒரு திரைப்படமாகத்தான் பார்க்கிறார்கள். மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளுடன், பாடல்களும் இதில் இருக்கிறது.பெரும்பாலும் பல பேர் சினிமா மீதான மோகத்தில் தான் இங்கே வருகிறார்கள். ஆனால் சில பேர் மட்டும் சினிமாவிற்குள் வந்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே வருவார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் அருண்ராஜா காமராஜ்.

Label webseries